இந்தியா

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

95views

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். திமுக சார்பில் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா மற்றும் மதிமுக சார்பில் வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், மத்திய அரசு மீண்டும் ஆய்வு செய்து அறிக்கையில் உள்ள சேத விவரங்களை மாற்ற வேண்டும் என வலியுறுத்தியதாக கூறினார். மேலும், குளிர்கால கூட்டத்தொடரில், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதோடு, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். மேலும், குடியுரிமை சட்டம் தொடர்பாக அவையில் பேச நேரம் ஒதுக்க கோரிக்கை விடுத்ததாகவும் டி.ஆர்.பாலு குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவை வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்ய உள்ளார். இதையடுத்து, ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டதும், குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு பிறகு புதிய வேளாண் சட்டங்கள் ரத்து, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இதனிடையே எதிர்கட்சிகள் தலைவர்கள் இன்று நடத்தும் கூட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் புறக்கணித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பொது நலன் சார்ந்த பிரச்னைகளில் திரினாமுல் காங்கிரஸ் தங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும் எனக்கூறினார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!