IND vs NZ: ‘2ஆவது டெஸ்ட்’…ஷ்ரேயஸ் ஐயர் எந்த இடத்தில் களமிறங்குவார்? லக்ஷ்மன் அதிர்ச்சி தகவல்!
இந்தியா, நியூசிலாந்து இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, துவங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் 345/10 ரன்கள் சேர்த்தது.
அடுத்துக் களமிறங்கியுள்ள நியூசிலாந்து அணி 129/0 ரன்கள் சேர்த்துள்ளது. டாம் லதாம் 50 (165), வில் யங் 75 (180) ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள். இன்று மூன்றாவது நாள் ஆட்டம் துவங்கி நடைபெறும்.
முதலில் களமிறங்கிய இந்திய அணி 145/4 எனத் திணறிக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் சிறப்பாக விளையாடி, அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். இறுதியில் அறிமுக டெஸ்டில் சதமும் விளாசினார். இதனால்தான், இந்திய அணியால் 345/10 என்ற நிலையை அடைய முடிந்தது.
ஷ்ரேயஸ் ஐயர் தனது முதல் போட்டியிலேயே திறமையை நிரூபித்துவிட்டதால், இரண்டாவது போட்டியில் நிச்சயம் இடம் கிடைக்கும் என கருதப்படுகிறது. இந்த இரண்டாவது டெஸ்டின்போது ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் அணிக்கு திரும்பிவிடுவார்கள் என்பதால் அஜிங்கிய ரஹானே, சேத்தேஸ்வர் புஜாரா ஆகியோரில் ஒருவர் நீக்கப்பட்டு, ஷ்ரேயஸ் ஐயர் சேர்க்கப்பட வாய்ப்பிருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
இந்நிலையில் இந்த விவகராம் குறித்துப் பேசிய முன்னாள் வீரர் விவிஎஸ்.லக்ஷ்மன், கருண் நாயருக்கு நடந்த அதே மோசமான சம்பவம்தான் ஷ்ரேயஸ் ஐயருக்கும் நடக்கும் எனத் தெரிவித்துள்ளார். “2016ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற டெஸ்டில் கருண் நாயர் 303 ரன்கள் அடித்து சாதனை படைத்திருந்தார். அடுத்து அஜிங்கிய ரஹானே காயத்தில் இருந்து குணமடைந்ததும், கருண் நாயர் ஓரம்கட்டப்பட்டார். இதே நிலையில் ஷ்ரேயஸ் ஐயர் இருக்கிறார்” எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், “கோலி தற்போது ஓய்வில் இருப்பதால்தான் ஷரேயஷுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. கோலி அடுத்த போட்டியின்போது அணிக்கு திரும்பிவிடுவார். இதனால், ரஹானேவுக்கு பதிலாக ஷ்ரேயஸ் களமிறக்கப்படலாம் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அப்படி நடக்க வாய்ப்பில்லை. அடுத்த போட்டியில் ஷ்ரேயஸ் பெவிலியனில் அமர்வதற்கு அதிக வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தார்.