சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி-20 இறுதிப் போட்டியில் கர்நாடக அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி கோப்பையை கைப்பற்றியது.
சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி-20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வந்தது. இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு தமிழ்நாடு மற்றும் கர்நாடக அணிகள் முன்னேறின. இந்த அணிகள் மோதிய இறுதிப் போட்டி, டெல்லியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் களமிறங்கிய கர்நாடக அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான கேப்டன் மணீஷ் பாண்டே 13 ரன்களிலும் கருண் நாயர் 18 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். மிடில் ஆர்டரில் களமிறங்கிய அபினவ் மனோகர் 46 ரன்களும் பிரவீன் துபே 33 ரன்கள் விளாசினர்.
தமிழ்நாட்டு அணி சார்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய தமிழ்நாடு அணி, 6 விக்கெட் இழந்த நிலையில், கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. ஜெகதீசன் 41 ரன்களும் ஹரி நிஷாந்த் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான, ஷாருக் கான் கடைசி பந்தில் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். அவர் ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுத்தார்.
கர்நாடக அணியில் கே.சி.கரியப்பா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பிரதீக் ஜெயின், வித்யாதர் பட்டேல், கருண் நாயர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம், தொடர்ந்து 2 வது முறையாகவும் மொத்தம் மூன்று முறையும் சையத் முஷ்டாக் அலி கோப்பையை கைப்பற்றி தமிழ்நாடு அணி சாதனை படைத்துள்ளது. இதற்கு முன், பரோடா, குஜராத், கர்நாடக அணிகள் இந்த கோப்பையை 2 முறை கைப்பற்றியுள்ளன.