கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை மாதம் பிறந்த நிலையில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறந்தது. ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கேரளாவில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் இடுக்கி, பம்பா அணைகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பெரியாறு, பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
உலகில் கொரோனாவால் 25.69 கோடி பேர் பாதிப்பு – அமெரிக்காவில் ஒரு நாள் கேஸ்கள் குறைவு
இதனால் கடந்த 15-ஆம் தேதி அன்று சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பம்பையில் நீராட தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்படி 18 ஆம் தேதி வரை முன் பதிவு செய்த பக்தர்களுக்கு வேறு தேதியில் தரிசனம் செய்ய அனுமதிப்பது என கேரள அரசு முடிவு செய்தது. அது போல் தற்காலிக அவசர முன் பதிவு தரிசனத்திற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
கடந்த 10ஆம் தேதி முதல் 7 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சபரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா கூறுகையில் பத்தினம்திட்டா மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பம்பை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கல்கி அணையிலிருந்தும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மழை குறைந்து பம்பை ஆற்றில் வெள்ளம் குறைந்த பின்னர் ஆன்லைனில் பதிவு செய்தவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு செல்வது வழக்கம்.
அந்த மாநிலங்களிலும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்து நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரளாவிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.