590
திருச்சி வந்தால் “இவரை” பார்க்காமல்..செல்வது என்பது மிகப்பெரிய குறை தான். .
பார்த்துவிட்டு சென்றாலோ..மனம் அன்று ஆனந்தக்கூத்தாடினாலும்..அவர் அழகிலேயே பித்தாகி லயித்துப்போகும்.
“இவர்” மயக்கத்தில் இருப்போர் என்னைப்போல பலர்.
யாரிவர் ?!
மிக நெருக்கமாக , அழகாக சலசலத்து ஓடும் காவிரியின் கரையில் , நதியை ஆசீர்வதித்து பாதம் நீட்டி, ஆதிசேஷன் படுக்கையில் தலையில் குடையாக பிடிக்க, உலகங்களை சுருட்டி தலையணையாகக்கொண்டு சற்றே திரு முகத்தை நிமிர்த்தி வருபவரைக் கண்டு அவர்களுக்கு காட்சி தர.. யோக நித்திரையில் இருக்கும்..அப்பாலரங்கர்- அப்பக்குடத்தான் தான் “இவர்”.
மிகச்சிறிய ஊர் தான் கோவிலடி. ஆனால் மிகப்பெரிய ரங்கனைக்கொண்ட ஆழ்வார்களை, ஆச்சார்யர்களை ஈர்த்து அழைக்கும் உலகுண்ட பெருவாயன் சயனிக்கும் திருத்தலம்.
அப்பால ரங்கம், திருப்பேர் என்ற பெயர் கொண்ட 108 திவ்யதேச திருத்தலங்களில் ஒன்று.
கல்லணை- திருவையாறு மார்க்கத்தில்..திருச்சியிலிருந்து 30 வது கிலோமீட்டரில் உள்ளது.
பஞ்ச ரங்கம் என்றழைக்கப்படும் அரங்கனது திருத்தலங்கள் ..மிக விசேஷமானவை.
பிரிந்து பாயும் இரு காவிரிக்கு மத்தியில் உள்ள தலங்களாகும்.
ஆதி ரங்கம் – ஸ்ரீரங்கப்பட்டினம்(மைசூர்),
அப்பால ரங்கம் – திருப்பேர்நகர் (கோவிலடி),
மத்திய ரங்கம் –ஸ்ரீரங்கம் (திருச்சி),
சதுர்த்த ரங்கம் – திருக்குடந்தை சாரங்கபாணி ஸ்தலம் (கும்பகோணம்),
பஞ்ச ரங்கம்(ஐந்தாவது ரங்கம்) – திருஇந்தளூர் பரிமள ரங்கம் (மயிலாடுதுறை).
ஆகிய தலங்களை தரிசித்தால் 108 திருத்தலங்களை தரிசித்த பலன் உண்டு.
அமர்ந்த..நின்ற திருக்கோலத்தில் உள்ள அர்ச்சாவதார திருமால் மூர்த்திகளை விட தனி கவரும் அழகு
யோக நித்தரையாக மாயனாகி நம்மை ஆட்கொள்ளும் இந்த பள்ளிக்கொண்ட பெருமாளிடம் உள்ளது.
வடபத்ர சாயி என்ற பள்ளிக்கொண்ட பெருமாளுக்கு சூடிக்கொடுத்த ஆண்டாள் மனதைப்பறிக்கொடுத்ததும்..மணந்ததும் திருவரங்கம் அரங்கனிடம் தானே..!
ரெண்டே பிரகாரங்கள், 2.5 ஏக்கரில் சற்றே உயரத்தில் அமைந்தத்திருக்கோவில்..திருப்பேர் என்று முன்னர் அழைக்கப்பட்டு இன்று
கோவிலடி என அழைக்கப்படுகிறது.
பஸ் செல்லும் வழியில்..இக்கோயில் இருப்பதற்கு அடையாளமாக ஒரு போர்ட் மட்டுமே பார்க்கலாம். இறங்கி..உள்ளேப்போனால்..ஒரு வழி காவேரிக்கும்..மற்றொன்று கோவிலுக்கும் செல்லும். வெளியில் பூக்கடை..பழக்கடை என்ற எந்தவொரு திவ்ய தேசக்கோவிலுக்கும் உண்டான முகாந்திரம் இல்லாத இத்தலம்..நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பெரியாழ்வார் இந்த நான்கு ஆழ்வார்களால்..தமிழமுதம் தந்து பாடப்பட்டு..6 வது திவ்ய தேசம் என்றழைக்கப்படுகிறது. .
முதலில்..4 பெரியப்படிகள்..பின்னர் திருக்கோயிலின் வாயில்…சிறிய மண்டபம்..த் விஜஸ்தம்பம் மீண்டும் படிகள் (30 இருக்கலாம்)
கடந்ததும்…கோவிலின் நுழைவாயில்..நேராக அரங்கனின் வாசம்.
எப்போதுமே மிக அழகாக சேவை சாதித்து அருள்வார் இந்த அரங்கர்.
.. வாருங்கள் உள்ளே என்றழைத்தார் அர்ச்சகர். அவன் அழகைக்கண்டவர்கள்..கண் இமைக்க மறுப்பதும்…உடல் உருகி.. கண்களில் நீர் சுரக்க நிற்பதும் நிஜம்.
கற்பூர வெளிச்சத்தில் காணக்காண..ஒரு வேளை
வைகுண்டத்தில் தான் நாம் நிற்கிறோமா..என்ற தோற்ற மயக்கத்தில் அரங்கன் காலடியில் பூமாதேவி அமர்ந்திருக்கிறார். எங்கு ரெங்கன்..பள்ளிக்கொண்டிருந்தாலும்..பூமா தேவி மோட்சம் வேண்டி அங்கு வந்து வேண்டி இருக்கிறாளாம்.
ஒருபக்கம் மார்க்கண்டேய மகரிஷி..
ஒருகை..யோக முத்திரையுடன்..மறு கை அருகில் பெரிதாக உள்ள அப்பக்குடத்தை தொட்டவாறு உள்ளது.
அதனாலேயே அப்பக்குடத்தான் என்றப்பெயரும் இப்பெருமாளுக்கு.
சுவையான வரலாறு இல்லாமலா இப்பெயர் ?!
ஸ்ரீ நகர்..திருப்பேர் ஆதி கால ஊரின் பெயர்.
பெருமாள் இங்கு வருவதற்கு முன்பே திருமகள் வந்தமர்ந்த ஊர் இவ்வூர்.
ஒரு முறை வைகுண்டத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் வீற்றிருக்கையில், யார் சிறந்தவர் ஸ்ரீதேவியா..? பூமா தேவியா என்ற பட்டிமன்றம் எழுந்த போது பூதேவியே என்று தீர்ப்பானதில்..வெகுண்ட ஸ்ரீதேவி பெருமாளைவிட்டுப்பிரிந்து வந்து தவம் இயற்றிய தலம் புரச மரங்கள் அடர்ந்த வனமாக இருந்த இந்த கோவிலடி . அதனாலே திருப்பேர் நகர் என்ற பெயர் பெற்றது. அங்கு பெருமாளும் தேவியின் தவத்தால், மகிழ்ந்து அவரை ஆட்கொண்டார்.
உபரிசிரவசு என்ற பாண்டிய அரசன் கௌதம முனிவரது ஆசிரமத்தில் அட்டகாசம் செய்த யானையைக் கொல்லும் சமயம் , அந்த யானை மதத்தால் ஒரு யோகியை கொன்றுவிட, பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கப்பட்ட அரசன், அந்தப்பாவத்தை உணர்ந்து பிராயசித்தம் தேட..இந்த புரசக்காட்டிற்கு வந்ததும் எதோ ஒரு அருள் சக்தி தன்னை ஆட்கொள்வதை உணர ஆரம்பிக்கிறான். தன்னுடைய குரு நாதரது ஆசியுடன் அந்த புரச வனத்திலே தங்கி தினம் அங்கு வரும் ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு அளித்து வர தோஷம் நீங்கும் என செய்து வருகிறான்.
தினமும் அமுதுப்படைத்துவரும் வேளையில்..ஒரு ஏழை அந்தணர்க்கு (பெருமாளே சோதிக்க எண்ணி அந்தணர் வடிவில் ) உணவு படைக்கும் போது..அவர் அனைத்தையும் உண்டு இன்னமும் பசிக்கிறதே என்றுக்கேட்கிறார். அப்போது அரசன்..மீண்டும் உணவு தயாரிக்க சிறிது நேரம் ஆகும்..ஆகையால் அதுவரை..இந்த அப்பத்தை
உண்டு..இளைப்பாற வேண்டும் எனவும் கேட்டு க்கொள்கிறான். அதன்படியே அந்தணரும் படுத்தப்படி இருக்க…
எமபயத்தால்..இருந்த மார்க்கண்டேயருக்கு சிவபெருமான் தோன்றி, இந்நிகழ்ச்சி ப் பற்றிக்கூறி, அது பெருமாளே என்றும் அவரே பயத்தைப்போக்குபவர் என்றும் மார்க்கண்டேயரை கோவிலடி ப்போக பணிக்கிறார்.
வந்த மார்க்கண்டேயர் உறங்கும் கோலத்தில் உள்ள அந்தணரை 100 முறை வணங்கி எழுந்ததும் அவரை தனது நிஜ உருக்காண்பித்து ஆசீர்வதித்து..அவரது எம பயம் போக்கி ஆயூளை நீட்டித்தும், அப்பக்குடம் தந்த அரசனுக்கும் காட்சித் தந்து அவனது தோஷத்தையும் போக்கி..அப்பாலரங்கர் , அப்பக்குடத்தான் ஆகிறார்.
பல புராணகதைகளை கொண்ட கோவிலடி அமைதியை அணியாகக்கொண்டுள்ளது.
இப்பெருமானின் வலது கை ஒரு அப்பக் குடத்தை
அணைத்தவண்ணம் உள்ளது.
சுவையான அப்பம் தினமும் இரவு பகவானுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது.
கேட்டாலும் கொண்டு வந்து தருகிறார்கள். பெரிய அப்பமாக உள்ளது.
தாயார் கமலவல்லி, இந்திரதேவி.
திருச்சிக்கு மிக அருகில் , எமபயம், கர்வம், அனைத்து பயங்கள், தோஷங்களைப்போக்கும் இந்த அப்பக்குடத்தானை இறுதியாகப் பாடிய நம்மாழ்வார் மோட்சம் சென்றதாகக்கூறப்படுவதால்..
இந்த அரங்கனை வழிபடுவோர்க்கு இனியொரு பிறவியில்லா மறுமையும் கிட்டும் என்கின்றனர் ஆன்றோர்கள்.
நகரங்களில் நம்வசதிக்காக பல புதுப்புது ஆலயங்கள் எழுந்திருந்தாலும்,
பல பாரம்பரியங்களை சுமந்துக்கொண்டும், நம் கலாச்சாரம்,பண்பாடு, பக்தியை பறைசாற்றும், நம்மை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும், இம்மாதிரியான திருக்கோயில்களுக்கும் சற்று படையெடுப்போமா
-
சுமிதா ரமேஷ்
add a comment