ஆந்திர அரசு கொண்டுவந்துள்ள புதிய தியேட்டர் கட்டணத்தால் பிரமாண்ட படமான ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை வெளியிடுவதில் சிக்கல் நேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள ‘ஆர்ஆர்ஆர்’ படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியா பட், பிரகாஷ் ராஜ் நடிப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. ‘ஆர்ஆர்ஆர்’ படம் வரும் ஜனவரி 7-ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகிறது என்று படக்குழு சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம் ஆந்திராவில் திரையிடப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது. ஆந்திர அரசு சில மாதங்கள் முன் தியேட்டர்களில் டிக்கெட் விலையை நிர்ணயம் செய்தது. சினிமா அரங்குகளின் இருக்கைகளின் எண்ணிக்கையை பொறுத்து, டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி கிராமப்புறங்கள் உள்ள தியேட்டர்களின் டிக்கெட் விலை மிகக்குறைவாகவும், நகரப்பகுதியில் உள்ள தியேட்டர்களின் டிக்கெட் விலை அதிகமாகவும் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த விலை நிர்ணயத்தால் பெரிய பட்ஜெட் படங்கள் வசூல் எடுக்க முடியாமல் இருப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, இதுதொடர்பாக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியுடன் திரைப்படத் துறையைச் சேர்ந்த நபர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்தப் பேச்சுவார்த்தை இன்னும் முடிவு எட்டப்படவில்லை. இன்னும் ஒரு மாதத்தில் சங்கராந்தி பண்டிகை வெளியாக இருக்கிறது. இந்தப் பண்டிகையை முன்னிட்டு தெலுங்கின் முன்னணி நட்சத்திரத்தின் படங்கள் வெளியாக இருக்கின்றன. இதில் ‘ஆர்ஆர்ஆர்’ படமும் வெளியாக இருக்கிறது.
மற்றப் படங்களை காட்டிலும் அதிக பட்ஜெட் கொண்ட ‘ஆர்ஆர்ஆர்’ படம் ஆந்திர அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை கொண்டு வசூல் செய்ய முடியாது. இதையடுத்துதான் அரசின் முடிவை எதிர்த்து ‘ஆர்ஆர்ஆர்’ பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க போவதாக தகவல் வெளியானது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், இந்த தகவலை மறுத்துள்ள படத்தை தயாரித்துள்ள டிவிவி எண்டெர்டெயின்மென்ட், “படத்தின் டிக்கெட் விலையை அதிகரிக்க நீதிமன்றத்தை அணுக திட்டமிட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன. அப்படி எதுவும் நாங்கள் நீதிமன்றத்தை அணுக மாட்டோம், ஆனால் ஆந்திரப் பிரதேச முதல்வரிடம் எங்களின் கோரிக்கையை முன்வைப்போம்.
டிக்கெட் விலை குறைப்பு எங்கள் படத்தைப் பெரிதும் பாதிக்கும் என்பது உண்மைதான். எங்களுக்கு நீதிமன்றம் செல்லும் எண்ணம் இல்லை. ஆந்திர முதல்வரை அணுகி எங்கள் நிலைமையை விளக்க முயற்சிக்கிறோம். இணக்கமான தீர்வு ஏற்பட முயற்சிக்கிறோம்” என்று மறுப்பு தெரிவித்துள்ளது.