‘லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்’ தொடரின் கமிஷனராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம், எமிரேட்சில் நடந்த ‘டி-20’ உலக கோப்பையுடன் நிறைவு பெற்றது. புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ரவி சாஸ்திரிக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வளைகுடாவில், ‘லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்’ (எல்.எல்.சி.,) தொடர் முதன்முறையாக நடக்கவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த முன்னாள் வீரர்கள், இந்தியா, ஆசியா, ‘ரெஸ்ட் ஆப் வேர்ல்டு’ என, மூன்று அணிகளாக பங்கேற்க உள்ளனர். இத்தொடருக்கான கமிஷனராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.
ரவி சாஸ்திரி கூறுகையில், ”லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் நிர்வாகத்தில் இணைந்ததில் மகிழ்ச்சி. முன்னாள் வீரர்கள் எதுவும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு ரசிகர்களிடம் நல்ல மதிப்பு உள்ளது. இது புதிய முயற்சி. நல்ல எதிர்காலம் உண்டு,” என்றார்.