ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தவறவிட்ட கேட்ச்-சிற்கு பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி மன்னிப்புக் கேட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் 17-ஆம் தேதி தொடங்கியது. இதன் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் இன்றிரவு மோதுகின்றன. இதற்கிடையே லீக் சுற்றுகள் முடிந்து நடந்த நாக் அவுட் போட்டியில், அதாவது இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் – ஆஸ்திரேலிய அணிகள் மோதின.
இதில், தோல்வி அடையும் நிலையில் இருந்த ஆஸ்திரேலிய அணி, இறுதிக்கட்ட ஓவர்களில் அதிரடியாக ஆடி வெற்றிப் பெற்றது. 19 வது ஓவரில் அதிரடியாக ஆடிய ஆஸ்திரேலிய வீரர் வேட் கொடுத்த எளிதான கேட்சை பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி கோட்டை விட்டார். கேட்சை அவர் பிடித்திருந்தால், ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும்.
பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியதை அடுத்து, ஹசன் அலியை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். அவருக்கு ஆதரவாக இந்திய ரசிகர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் கூறும்போது, ஹசன் அலி கேட்சை தவறவிட்டது, ஆட்டத்தின் திருப்புமுனை என்றும் அந்த கேட்சை பிடித்திருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரியாக இருந்து இருக்கும் என்றும் ஆனால் விளையாட்டில் இப்படி நடக்கத்தான் செய்யும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கேட்சை தவற விட்டதற்கு ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார் ஹசன் அலி. இதுபற்றி சமூக வலைதளத்தில் அவர் கூறியிருப்பதாவது: கேட்சை தவறவிட்டதால் நீங்கள் வருத்தமடைந்திருப்பதை அறிவேன். அது எனக்குமே பெரும் ஏமாற்றம். ஆனால், என் மீதான உங்கள் எதிர்பார்ப்பை மாற்றாதீர்கள். நான் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இன்னும் சிறப்பாக உயர்ந்த அளவில் சேவை செய்ய நினைக்கிறேன். அதனால் கடின உழைப்புக்கு திரும்புகிறேன். உங்கள் மெசேஜ்கள், ட்வீட்களுக்கு நன்றி. இவ்வாறு தெரிவித்துள்ளார்.