அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடியே சிறந்த பிரதமர் வேட்பாளர் என 43.7 சதவிகித வாக்காளர்கள் பார்ப்பதாக ஏபிபி-சிவோட்டர்-ஐஏஎன்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
கருத்துக் கணிப்பு நடத்தப்பட்ட மாநிலங்களில் அதிகபட்சமாக மணிப்பூரில் 57.5 சதவிகித வாக்காளர்கள் பிரதமர் பதவிக்கு மோடியே சிறந்த வேட்பாளர் எனத் தேர்வு செய்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக உத்தரகண்டில் 50.1 சதவிகித வாக்காளர்களும், உத்தரப் பிரதேசத்தில் 44.4 சதவிகித வாக்காளர்களும், கோவாவில் 36.1 சதவிகித வாக்காளர்களும், பஞ்சாபில் 14.3 சதவிகித வாக்காளர்களும் பிரதமர் மோடியைத் தேர்வு செய்துள்ளனர்.
இந்தக் கருத்துக் கணிப்பில் காங்கிரஸின் ராகுல் காந்தி மற்றும் மன்மோகன் சிங், பாஜகவின் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆம் ஆத்மியின் அரவிந்த் கேஜரிவால் ஆகியோரது பெயரும் இடம்பெற்றிருந்தன.
பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக 5 மாநிலங்களில் அதிகம் தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர் ராகுல் காந்தி. 5 மாநிலங்களிலும் 9.6 சதவிகிதத்தினர் ராகுல் காந்தியே சிறந்த பிரதமர் வேட்பாளர் எனத் தேர்வு செய்துள்ளனர். அரவிந்த் கேஜரிவாலை 5.2 சதவிகிதத்தினரும், மன்மோகன் சிங்கை 3.1 சதவிகிதத்தினரும், யோகி ஆதித்யநாத்தை 2.6 சதவிகிதத்தினரும் தேர்வு செய்துள்ளது கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.