முக்கிய வழக்குகளை சிபிஐ விசாரிக்க அனுமதி தர மறுக்கும் 8 மாநிலங்கள்: உச்ச நீதிமன்றம் அதிருப்தி
வங்கி மோசடி உள்ளிட்ட முக்கியவழக்குகளை விசாரிக்க சிபிஐ-க்குஅனுமதி மறுக்கும் 8 மாநிலங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
டெல்லி சிறப்பு போலீஸ் எஸ்டாபிளிஷ்மென்ட் சட்டத்தின் 6-வது பிரிவு, பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் ஊழல், வங்கி முறைகேடு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரிக்க சிபிஐ-க்கு அதிகாரம் வழங்கி உள்ளது. இதற்கு அனைத்து மாநிலங்களும் பொது ஒப்புதல் வழங்குவது வழக்கம். இந்நிலையில், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 8 மாநிலங்கள் இத்தகைய பொது ஒப்புதலை கடந்த 2018-ம் ஆண்டு திரும்பப் பெற்றன. இதனால் குறிப்பிட்ட வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரிக்க வேண்டுமானால் சம்பந்தப்பட்ட மாநில அரசின் ஒப்புதலை பெற வேண்டும்.
இது தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. வழக்கு விசாரணையில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து பதில் அளிக்குமாறு சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ‘வழக்கு விசாரணைக்கான பொது ஒப்புதலை 8 மாநிலங்கள் திரும்பப் பெற்றுக் கொண்டதால், ஒவ்வொரு வழக்குக்கும் தனித் தனியாக அனுமதி கோர வேண்டி உள்ளது. இதன்படி, கடந்த 2018 முதல் 2021 ஜூன் மாதம் வரையிலான காலத்தில் 150-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரிக்க ஒப்புதல் வழங்குமாறு அம்மாநில அரசுகளிடம் கோரி உள்ளோம்.
இதில் மத்திய அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார் உள்ளிட்ட 18 சதவீத வழக்குகளை விசாரிக்க மட்டுமே அம்மாநிலங்கள் அனுமதி வழங்கி உள்ளன. மேலும் சிபிஐ நடத்தும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு விசாரணை, உயர் நீதிமன்றங்கள் இடைக்கால தடை விதித்துள்ளதால் காலதாமதம் ஏற்படுகிறது’ என கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘முக்கியமான வழக்குகளை விசாரிக்க சிபிஐ-க்கு ஒப்புதல் வழங்கமறுக்கும் மாநில அரசுகளின் செயல் அதிருப்தி அளிக்கிறது. சிபிஐ வழக்குகளில் நீதிமன்றங்கள் இடைக்கால தடை விதித்திருப்பதும் கவலை அளிப்பதாகஉள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.