சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு இன்னும் ஓய்வு பெறவில்லை என்று கூறியுள்ள யூனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கேல், இன்னொரு உலகக் கோப்பை தொடரிலும் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் டுவைன் பிராவோ ஓய்வு பெற்றார். துரதிருஷ்டமாக இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதேபோட்டியுடன் யூனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கேலும் ஓய்வை அறிவித்து விடுவார் என்று தகவல்கள் பரவின. அதற்கேற்றவாறு, நேற்றைய போட்டியில் வர்ணனையாளர்களாலும், கேமரா மேன்களாலும் கிறிஸ் கேல் அதிகம் ஃபோகஸ் செய்யப்பட்டார். 9 பந்துகளை எதிர்கொண்ட கேல், 2 சிக்சர்களுடன் 15 ரன்கள் எடுத்து கேல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஒரு ஓவர் வீசிய கேல், மிட்செல் மார்ஷ் விக்கெட்டை எடுத்தார். அதன்பின்னர் மார்ஷிடம் ஓடிச் சென்று அவரை கட்சியணைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தற்போது இல்லை என்று கிறிஸ் கேல் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
இந்த உலகக்கோப்பையை அனுபவித்து ஆட வேண்டும் என்று முயற்சி செய்தேன். ஆனால் நான் நினைத்தது நடக்கவில்லை. எனக்கு மிக மோசமான உலகக்கோப்பையாக இந்த தொடர் அமைந்து விட்டது. இது எதார்த்தமான ஒன்றுதான். வெஸ்ட் இண்டீசில் திறமை மிக்க இளம் வீரர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து தற்போது நான் ஓய்வு பெறப்போவதில்லை. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் நிர்வாகிகள் வாய்ப்பு அளித்தால் இன்னும் ஒரு உலகக்கோப்பை தொடரில் விளையாடுவேன். ஆனால் அவர்கள் இதை செய்வார்கள் என்று நான் நினைக்கவில்லை.
உலகக்கோப்பை தொடரில் நாங்கள் தோல்வியை விரும்பவில்லை. குறிப்பாக எங்களது ரசிகர்களை வருத்தமடைய செய்ய எனக்கு விருப்பமே கிடையாது. முதல் போட்டி ஆரம்பித்தபோதே எனது தந்தைக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுவிட்டது. இது பலருக்கும் தெரியாது. விளையாட்டில் கவனமாக இருந்த நான் அவரை பார்க்க செல்லவில்லை. ஒரு விளையாட்டு வீரருக்கு இதுபோன்ற நெருக்கடியான, உணர்ச்சிப் பூர்வமான சம்பவங்கள் எல்லாம் நடக்கும் இவ்வாறு அவர் கூறினார்.