உலகம்

டாவின்சி தான் மோனாலிசாவா?

104views

பாரீஸ் நகரில் லூவர் அருங்காட்சியகம் உள்ளது. இது அங்குள்ள புகழ்பெற்ற அருங்காட்சியமாகும். அங்கிருந்த ஓர் ஓவியம் 1911 ஆம் ஆண்டு காணாமல்போனது. அந்த செய்தியைக் கேள்விப்பட்டு ஆச்சரியப்பட்டவர்கள் நிறைய பேர் என்றாலும், காணாமல் போன அந்த ஓவியம் மாட்டப்படிருந்த இடத்தை பார்க்க வந்த கூட்டம்தான் உலக மக்களால் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது. அந்த ஓவியம் மாட்டப்பட்ட இடத்திற்கே இவ்வளவு ஆர்வம் என்றால், அங்கு மாட்டப்பட்ட ஓவியத்தை பார்க்க எவ்வளவு ஆர்வம் உருவாகியிருக்கும் என்பதை நினைத்துக் கூட பார்க்க இயலவில்லை. அப்படி ஒரு ஆச்சரியம் நிறைந்த ஓவியம் தான் டாவின்சியின் ‘மோனாலிசா’ ஓவியம். 1913 ஆண்டு அதாவது இரண்டு ஆண்டுகளிலேயே பல்வேறு விசாரணைக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஓவியம், அதே லூவர் அருங்காட்சியகத்தில் இன்றும் கம்பீரமாகக் காட்சியளித்து கொண்டிருக்கிறது.  .

உலகத்தில் எண்ணற்ற சிறப்பான ஓவியங்கள் உள்ள நிலையிலும், அவற்றில் இன்றும் மிகச் சிறந்த திறனாய்வுக்கும், ஆராய்ச்சிக்கும் ஏற்ற ஒரு ஓவியமாக இந்த ‘மோனாலிசா’வின் ஓவியம் உள்ளது.

இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க ஓவியம் என்பதால், இதனை யாராலும் மறக்க முடியாது.  இன்றளவும் இந்த ஓவியத்தை பார்க்கும்போது ஏற்படும் உணர்வின் மீது பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதை வரைந்தவரை `ஓவியர்’ என்று சொல்வதைவிட, `அறிவியல் கலைஞன்’ என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். காரணம், கைதேர்ந்த கலைஞன், சிறந்த கவிஞர், தத்துவமேதை, விளையாட்டு வீரர், பொருளியல் வல்லுநர், கட்டடக்கலை நிபுணர், கடல் ஆராய்ச்சியாளர், வானியல் விஞ்ஞானி, மனித உடற்கூறு ஆய்வாளர், நீர்ப்பாசன நிபுணர், ராணுவ ஆலோசகர், இசை ஆர்வளர், கதாசிரியர்  என சகல துறைகளிலும் தனித்துச் செயல்பட்ட இவரை, உலகமே கொண்டாடியது. அவர் தான் லியோனார்டோ டா வின்சி.

இந்த ஓவியம் ‘லியொனார்டோ டா வின்சி’ இறந்த பின்பும் 500 ஆண்டுகளுக்கு மேல் இருந்தது.  டான் பிரவுனின் நாவலான ‘டா வின்சி கோட்’ இந்த வரலாற்று சிறப்புமிக்க மோனாலிசாவின் அடையாளம் மற்றும் அவரது புன்னகையின் ரகசியம் மீது நிறைய சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பியது.

வரலாற்று சிறப்புமிக்க மோனாலிசாவின் உண்மையான பெயர் Lisa Gherardini del Giocondo என்றும் இந்த லிசா ‘ப்னோரென்டைன்’ எனபவரின் மனைவி என்றும், 1503 ஆம் ஆண்டு இந்த ஓவிய வரைய டாவின்சிக்கு ஒத்துழைத்த போது இவருக்கு வயது 24 என்றும் பல ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  ஆனால் இந்த ஓவியத்தில் இருப்பது தான் உண்மையான மோனாலிசா என்பதற்கு வேறு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.  நிறைய மக்கள் மோனாலிசாவின் புன்னகையில் நிறைய மர்மங்களை கண்டறிந்துள்ளனர். ஏனெனில் உதட்டில் புன்னகை இருந்தாலும், அவரது கண்களில் ஒருவித சோகம் தெரிகிறது. எனவே தான், இவரது இந்த புன்னகை சர்ச்சைக்குள்ளானது.

மோனலிசாவின் புன்னகை போலவே அதை வரைந்த டாவின்சியும் ஒரு மர்மம் நிறைந்த மனிதராகவே கருதப்படுகிறார். கிட்டத்தட்ட அறுநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓவியம் மோனலிசா ஓவியம். பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த மோனலிசாவின் மர்ம புன்னகை கருத்தைப் பொய்யாக்கும் வகையில் மோனலிசாவின் புன்னகை மகிழ்ச்சியை குறிக்கும் புன்முறுவலே என்று ஜெர்மனியின் ப்ரீபெர்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வின் மூலம் விளக்கியுள்ளனர். மோனலிசாவின் இதழ் வளைவுகளில் கணினியின் மூலம் சிறிய கோண மாறுபாடுகளை செய்து அவை துன்பத்தை வெளிபடுத்துவது போல பல படங்களை உருவாக்கினார்கள். அதோடு உண்மையான மோனலிசா ஓவியத்தையும் சேர்த்து பொதுமக்களிடம் அவர்கள் கருத்து கேட்டனர். அவற்றை கண்டு மக்கள் சோகத்தை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்த படங்களை பார்த்து அது மோனலிசா அழுவதாக கூறினர். மோனலிசா சிரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்த படங்களை பார்த்ததும் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக உள்ளதாக கூறினார்கள். நிஜ மோனலிசாவின் படத்தை பார்த்த பெரும்பாலனோர் மோனலிசா சிரிப்பதாகவே கூறியுள்ளனர்.

இந்த கருத்துக்கணிப்பை பார்க்கையில், சிலர் அவர் சோகத்தை வெளிப்படுத்துவதாக எண்ணும் மனப்பான்மையுடன் நாம் பார்ப்பதால் தான் மோனலிசா அழுவது போல் தோன்றுவதாகவும், ஆனால் உண்மையில் மோனலிசாவின் புன்னகை மகிழ்ச்சியை மட்டுமே வெளிப்படுத்துகிறது என நிரூபணமாகியுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மோனாலிசாவின் வயிற்றில் கரு இருப்பதால் தான், அவர் வயிற்றை மறைத்துக் கொண்டு, உட்கார்ந்து இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் சில ஆராய்ச்சியாளர்கள், லிசா டெல் ஜியோண்டா, இந்த ஓவியம் வரையும் போது தனது இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்திருந்தார் என்றும், அவர் பெற்றெடுத்தது ஒரு ஆண் என்று நிரூபித்துள்ளனர்.

சில வரலாற்று ஆசிரியர்கள், மோனாலிசா ஆண் மற்றும் பெண் கலந்த கலவை என்று கூறியுள்ளனர். ஏனெனில் லத்தின் வார்த்தையான ‘ஆமோன்’ மற்றும் ‘எலிசா’ சேர்ந்து தான் ‘மோனா லிசா’ என்ற பெயர் வந்தது என்று கூறுகின்றனர்.

ஒரு சிலர், மோனாலிசா ஓவியமானது, டா வின்சி இளமையில் இருக்கும் போது தாடி இல்லாமல் இருப்பது போன்று உள்ளது. எனவே இது ஒரு self Potrait ஆக இருக்கலாம்  என்று கூறுகின்றனர்.

சில வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மோனாலிசா ஒரு சிறந்த சமச்சீர் என்ற அடிப்படையில் இருப்பதாக நம்புகின்றனர். ஏனெனில் இந்த ஓவியத்தின் முன் நின்று அதனைப் பார்த்தால், அந்த ஓவியம் நம்மைப் பார்ப்பது போன்றே இருக்கும் என்று கூறுகிறார்கள்.

இப்படி பல ரகசியங்கள் நிறைந்த இந்த ஓவியத்தை பல நூற்றாண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் என்றாலும், இதற்கான சரியான முடிவு என்பது பல நூறு ஆண்டுகள் ஆனாலும் தீர்க்கப்படாமலே உள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!