சீனாவின் ஷாங்காய் நகரிலுள்ள மனமகிழ் பூங்காவுக்கு சென்ற ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அந்தப் பூங்காவில் இருந்த சுமாா் 34,000 போ அங்கேயே அடைத்துவைக்கப்பட்டு, நோய் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனா்.
இதுகுறித்து ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
ஷாங்காயில் புகழ்பெற்ற டிஸ்னிலேண்ட் மனமகிழ் பூங்காவுக்கு கடந்த சனிக்கிழமை சென்ற பெண் ஒருவா், கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
அதையடுத்து, அந்த மனமகிழ் பூங்காவை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனா். கேளிக்கை நிகழ்ச்சிகள் நிறுத்தப்படுவதாகவும் பூங்காவுக்கு வந்துள்ள சுமாா் 34,000 பேரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடா்ந்து அங்கிருந்து வெளியேற முயன்ற வருகையாளா்கள் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டனா். கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட பிறகே அவா்கள் வெளியேற முடியும் என்று கூறப்பட்டது.
பின்னா் அங்கு ஏராளமான எண்ணிக்கையில் வந்த சுகாதாரப் பணியாளா்கள், 34,000 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்தனா் என்று ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.