சிங்கப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,000 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழக்கக் கூடும் எனத் தெரிவித்துள்ளார் அந்நாட்டு அமைச்சர் ஜனில் புதுச்சேரி.
சிங்கப்பூர் சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி நவ.1 நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில், ”மிகச் சிறந்த மருத்துவப் பராமரிப்பு வழங்கப்பட்டு வந்தாலும், சிங்கப்பூர் ஆண்டுக்கு சுமார் 2,000 கொரோனா மரணங்களை சந்திக்க நேரிடலாம். அவ்வாறு மரணமடைவர்களில் பெரும்பாலானோர் முதியவர்களாகவும் ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டவர்களாகவும் இருப்பார்கள்.
சிங்கப்பூரின் மொத்த மக்கள்தொகையில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி முழுமையாக போடப்பட்டுள்ளது. அவர்களுக்கு வரும் கொரோனா பாதிப்பு அறிகுறியற்றவையாகவும் அல்லது லேசானவையாகவும் உள்ளன. கடந்த 6 மாதங்களில் கொரோனாவால் இறந்தவர்களில் 95% பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களில் 72% பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வில்லை.
அதிக தடுப்பூசி விகிதம், ‘பூஸ்டர்’ தடுப்பூசிகள், லேசான நோய்த்தொற்று மூலம் இயற்கையான முறையில் நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துவது ஆகிய உத்திகளைக் கையாளுவதன் மூலம், கொரோனா பரவுவதைத் தடுக்க அரசாங்கம் தனது பங்கை ஆற்றுகிறது. சிங்கப்பூரில் கொரோனா நோயாளிகளின் இறப்பு விகிதம் 0.2 சதவீதமாக உள்ளது. கொரோனாவுக்கு பெருந்தொற்றுக்குமுன், சளிக் காய்ச்சல், நிமோனியா கிருமி, இதர சுவாசப் பிரச்சினைகள் காரணமாக பொதுவாக ஆண்டுக்கு 4,000 நோயாளிகள் மரணமடைந்தனர். போதுமான மருத்துவப் பராமரிப்பு இல்லாத காரணத்தால் மிகக் கூடுதலான மரணங்கள் ஏற்படும் சூழ்நிலையைத் தடுக்க சிங்கப்பூர் கடுமையாகப் போராடி வருகிறது’ என்றார் அவர்.