அறிவிப்பு

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமுவுக்கு சர்வதேச விருது

107views

மிகப்பெரிய சர்வதேச அங்கீகாரமாக, நவம்பர் 5-ம் தேதி லண்டனில் நடைபெற உள்ள உலகளாவிய உணவு, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா சாதனைகள் விருது நிகழ்ச்சி-2021-ல், செஃப் தாமு என்று அழைக்கப்படும் பிரபல சமையல் வல்லுநர் கோதண்டராமன் தாமோதரனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.

உலகத் தமிழ் அமைப்பால் (WTO-UK) நிறுவப்பட்ட இந்த விருது, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள ஹவுஸ் ஆஃப் காமன்ஸில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்படும்.

கேட்டரிங் துறையில் அனுபவம் வாய்ந்த ஒருவருக்கு வழங்கப்படும் முதல் விருது இதுவாகும். இந்த விருதை பெறுவதற்கு பெருமிதம் கொள்வதாக தாமு கூறினார்.

“என்னுடைய பல ஆண்டுகள் கடின உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக இதை நான் பார்க்கிறேன். இந்த பிரிவில் முதல் விருதை பெறுவது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரிய தருணம் ஆகும்,” என்று அவர் கூறினார்.

மேலும், இந்த விருது இளம் சமையல் கலைஞர்களை ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறினார்.

“கடின உழைப்பால் நீங்கள் எந்த உயரத்தையும் எட்டிவிட முடியும் என்பதற்கு இது மற்றவர்களுக்கு உந்துதலாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

தாமு, உணவு வழங்கல் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள இந்தியாவில் பிரபலமான சமையல் கலைஞர் ஆவார். இத்துறையில் அவர் இரண்டு சதாப்தங்களுக்கும் மேலாக ஆசிரியராகவும் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.

நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை தாமு பெற்றுள்ளதோடு, 3 கின்னஸ் சாதனைகளையும் படைத்துள்ளார்.

தற்போது அவர் தென்னிந்திய செஃப் அசோசியேஷன் தலைவராகவும் உலக சமையல் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.

சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமான தாமுவை, இன்ஸ்டாகிராமில் 500,000 க்கும் மேற்பட்டோர் அவரைப் பின்தொடர்கின்றனர்.

இல்லத்தரசிகளுக்கு 26 புத்தகங்களும், ஹோட்டல் மேனேஜ்மென்ட் மாணவர்களுக்கான சமையல் புத்தகங்களும் எழுதியுள்ளார்.

ஒவ்வொரு நாளும் 1 கோடியே 60 லட்சம் குழந்தைகளுக்கு உணவளிக்கும் சத்துணவு திட்டத்தில் புதிய மெனு வகைகளை அறிமுகப்படுத்திய பெருமை தாமுவுக்கு உண்டு. இதற்காக 1.5 லட்சம் பெண் சமையல் கலைஞர்களுக்கு பயிற்சி அளித்தார். இத்திட்டம் தமிழகத்தில் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!