இந்தியா

உ.பி.யில் திடீர் பரபரப்பு: பாஜக, மாயாவதி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் அகிலேஷ் கட்சியில் ஐக்கியம்!

57views

உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட 6 எம்.எல்.ஏக்கள் மற்றும் பாஜக எம்.எல்.ஏ.

ராகேஷ் ரத்தோர் என மொத்தம் 7 எம்.எல்.ஏக்கள் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியில் இணைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச சட்டசபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் ஆளும் பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் படுதீவிரம் காட்டி வருகின்றன.

மத்திய அமைச்சர்கள் படையையே பாஜக உ.பி. தேர்தல் களத்தில் இறக்கி இருக்கிறது. உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சிக்கு அடுத்ததாக காங்கிரஸ் கட்சி என்கிற நிலை உள்ளது. இதனை மாற்றி கவுரவமான இடங்களை பெறுவதில் காங்கிரஸ் முனைப்பு காட்டுகிறது.

உ.பி. தேர்தலை பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் எதிர்கொள்ள இருக்கிறது காங்கிரஸ். பிரியங்கா காந்தியும் இந்த தேர்தலில் போட்டியிடக் கூடும்; அவரையே முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் அறிவிக்க வாய்ப்பிருக்கிறது எனவும் கூறப்படுகிறது. இதனை பிரியங்கா காந்தியும் இதுவரை நிராகரிக்கவில்லை.

இந்நிலையில் உ.பி. தேர்தல் களத்தில் புதிய திருப்பமாக பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட 6 எம்.எல்.ஏக்கள், அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர். கடந்த ஆண்டு ராஜ்யசபா தேர்தலில் கட்சி மாறி வாக்களித்ததால் இந்த 6 எம்.எல்.ஏக்களையும் மாயவதி சஸ்பெண்ட் செய்திருந்தார். இதேபோல் பிரதமர் மோடி, பாஜக தலைமையை கடுமையாக விமர்சித்த சீதாப்பூர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. ராகேஷ் ரத்தோரும் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார். உ.பி.யில் ஒரே நாளில் 7 எம்.எல்.ஏக்கள் சமாஜ்வாதி கட்சியில் இணைந்திருக்கின்றனர். முன்னதாக பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள் நேற்று முன்தினம் அகிலேஷ் யாதவை சந்தித்து ஆலோசனையும் நடத்தி இருந்தனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சியில் இன்னும் நிறைய பேர் இணைய உள்ளனர். பாஜக மீது மக்களுக்கு அதிருப்தி நிலவுகிறது. சட்டசபை தேர்தலில் உ.பி.யில் இருந்து பாஜக துடைத்தெறியப்படும். 2017 சட்டசபை தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் நிறைவேற்றவில்லை. உ.பி. விவசாயிகள், பெண்கள், இளைஞர்களை ஆளும் பாஜக அரசு ஏமாற்றிவிட்டது. இலவச லேப்டாப்கள், டேப்லெட்டுகள் வழங்குவதாக அறிவித்த வாக்குறுதிகள் என்னதான் ஆயிற்று? மாணவர்களுக்கு 1ஜி டேட்டா இலவசம் என்ற அறிவிப்பு எங்கே போனது? என்றார்.

இதனிடையே பாஜக, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்து மேலும் சில எம்.எல்.ஏக்கள் அகிலேஷ் யாதவை சந்திக்க உள்ளனராம். அவர்களும் விரைவில் சமாஜ்வாதி கட்சியில் இணையக் கூடும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். அத்துடன் பாஜகவில் சீட் கிடைக்காமல் போனால் அப்போதும் சில எம்.எல்.ஏக்கள் சமாஜ்வாதி கட்சிக்கு தாவுவார்கள் என்கிற நிலை இருப்பதாக மூத்த பத்திரிகையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!