அக்னி-5 ஏவுகணையின் தாக்குதல் தொலைவை மோடி அரசு குறைத்து விட்டது.. காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு
மோடி தலைமையிலான மத்திய அரசு அக்னி-5 ஏவுகணையின் தாக்குதல் தொலைவை 500 கி.மீட்டர் குறைத்து விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியா நேற்று முன்தினம் கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்க கூடிய ஏவுகணையான அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. ஒடிசா அருகே கடல் பகுதியில் இருக்கும் அப்துல் கலாம் தீவில் நேற்று முன்தினம் இரவு 7.50 மணிக்கு அக்னி-5 ஏவுகணை சோதனை நடந்தது. சோதனையில் அக்னி-5 ஏவுகணை துல்லியமாக இலக்கை தாக்கி அழித்ததாக டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது. 17 மீட்டர் நீளம் மற்றும் 2 மீட்டர் அகலம் கொண்ட அக்னி-5 ஏவுகணை, 1.5 டன் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்க கூடிய திறன் கொண்டது. இந்த ஏவுகணை 5 ஆயிரம் கி.மீட்டர் வரை சென்று இலக்கை தாக்கும் திறனை கொண்டது.
அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ள வேளையில், இந்த ஏவுகணையின் தாக்கும் தூரத்தை மோடி அரசு குறைத்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மகாராஷ்டிரா காங்கிரஸ் சேவாதல் தனது டிவிட்டர் பக்கத்தில், அக்னி -5 ஏவுகணை முதன்முதலில் 2012 ஏப்ரல் 19ம் தேதியன்று 5500 கி.மீ. தாக்குதல் வரம்புடன் (இலக்கு தொலைவு) வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. மோடி அரசு அக்னி-5 ஏவுகணையின் தாக்குதல் எல்லையை 500 கி.மீ. குறைத்துள்ளது என்று பதிவு செய்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் இந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்சினை தீவிரமாக நடந்து கொண்டு இருக்கும் வேளையில், அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இது சீனாவுக்கு மறைமுகமாக விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது. மேலும் அக்னி-8 ஏவுகணை இப்போது உருவாக்கப்பட்டு வருகிறது. அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி ராணுவத்துக்கு கூடுதல் தெம்பை அளித்துள்ளது.