கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் பாகிஸ்தானுக்கு, மேற்காசிய நாடான சவுதி அரேபியா, 31ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதியுதவி செய்வதாக உறுதியளித்துள்ளது.அண்டை நாடான பாகிஸ்தான், கடந்த சில ஆண்டுகளாக கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. கொரோனா பரவல், இந்த நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. கடும் கடன் சுமை ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என, இரட்டை சிக்கல்களில் மாட்டி பாகிஸ்தான் தவிக்கிறது.
நிதி நெருக்கடியால் பாகிஸ்தானில் பல ஆலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டு, பலர் வேலையிழந்துள்ளனர்.ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியத்திடம் கடன் வாங்க, பாகிஸ்தான் முயற்சித்தது. ஆனால், பயங்கரவாத செயல்களை ஆதரிப்பதால், பிரான்ஸ் நாட்டின் நிதி கட்டுப்பாட்டு அமைப்பு, கருப்பு பட்டியலுக்கு முந்தைய பட்டியலில் பாகிஸ்தானை வைத்துள்ளது. இதனால் ஐ.எம்.எப்.,ன் நிதியுதவி கிடைக்கவில்லை.இந்நிலையில், சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்த, மத்திய கிழக்கு பசுமை முன்முயற்சி மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பங்கேற்றார். அங்கு சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அசிஸ் அல் சவுத்தை சந்தித்தார்.