இந்தியா

உ.பி.யில் கரோனா ஊரடங்கில் பதிவான மூன்று லட்சம் வழக்குகளை வாபஸ் பெறுகிறது பாஜக அரசு

51views

கடந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவத் தொடங்கியவுடன் உ.பி.யிலும் பல நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டிருந்தது. இதை மீறியவர்கள் மீது, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மொத்த வழக்குகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவற்றை வாபஸ் பெற உ.பி. அரசு முடிவு செய்துள்ளது. முன்னாள் மற்றும் இந்நாள் எம்.பி, எம்எல்ஏ.க்கள் மற்றும் எல்எல்சி.க்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதில்லை என முடிவாகி உள்ளது.

இதுகுறித்து உ.பி. அரசின் நீதித்துறை முதன்மைச் செயலாளர் பிரமோத் குமார் ஸ்ரீவாத்ஸவா கூறும்போது, ‘பேரிடர் மேலாண்மை சட்டத்தின் 188, 269, 270, 271 ஆகிய பிரிவுகள் மற்றும் தொற்றுநோய் சட்டத்தின் 188, 269, 270, 271 ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற உள்ளோம். இவற்றில் குற்றப்பத்திரிகை பதிவான வழக்குகளில் அவற்றை அரசு வழக்கறிஞர்கள் வாபஸ் பெறுவார்கள்’ என்றார்.

தப்லீக்-எ-ஜமாத் அமைப்பின் சார்பில் உ.பி.யின் மசூதிகளிலும் பல முஸ்லிம்கள் ஊரடங்கின் போது சிக்கினர். இவர்களில் தமிழகத்திலிருந்தும் சுமார் 100 பேர் உள்ளனர். இவர்கள் ஜாமீன் பெற்றுள்ள நிலையில், உ.பி. அரசின் தற்போதைய அறிவிப்பினால் அவர்கள் மீதான வழக்குகளும் வாபஸ் பெறும் வாய்ப்புகள் உள்ளன. தப்லீக் அமைப்பினர் மீதான வழக்குகளில் சில நீதிமன்ற விசாரணைக்கும் வந்துள்ளன. அதில் பரேலி உள்ளிட்ட சில மாவட்டங்களில் தப்லீக் அமைப்பினர் சிலர் நீதிமன்றத்தால் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!