வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டம்; நேர்மையான என்ஜிஓ-க்கள் அச்சப்பட வேண்டியதில்லை: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
“வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களைக் கண்டு, நேர்மையான தொண்டு நிறுவனங்கள் (என்ஜிஓ) அச்சப்பட தேவையில்லை” என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டத்தில் மத்திய அரசு கடந்த ஆண்டு சில திருத்தங்களை மேற்கொண்டது. இதற்குஎதிராக பல தொண்டு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தன. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த புதன்கிழமை மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறைச் சட்டம் 2010-ன்படி, வெளிநாடுகளில் இருந்து தொண்டு நிறுவனங்களுக்கு எவ்வளவு நிதி வருகிறது, அது எந்தெந்த வகையில் செலவிடப்படுகிறது என்பன போன்ற விவரங்கள் அரசுக்கு தெரியவர வாய்ப்பில்லாமல் இருந்தது. அந்த சட்டத்தின் 17-வது பிரிவானது, வெளிநாட்டு நிதிகளை பிரத்யேக வங்கிக் கணக்குகள் வாயிலாக தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கிறது. இதனால், வெளிநாட்டு நிதிகளை சில தொண்டு நிறுவனங்கள் முறைகேடாக பயன்படுத்தின.
அதுமட்டுமின்றி, வெளிநாட்டுநிதிகள் சில சமயங்களில் தேசத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டன. இதனால் வெளிநாட்டு நிதியுதவிகளை முறைப்படுத்தும் நடவடிக்கையில் அரசு இறங்கியது. அந்த வகையில், தொண்டு நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் ஆதார் எண்களை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்போதுதான், தொடர்புடையவர்கள் யார் என்பது அரசுக்கு தெரியவரும்.
மேலும், அவர்கள் வெளிநாட்டுநிதியை எதற்கு பயன்படுத்துகிறார்கள் என்பதையும் அரசால் கண்காணிக்க முடியும். முக்கியமாக, தேசத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இந்த நிதி செல்லாமல் இருப்பது உறுதி செய்யப்படும். அதேபோல, பல தொண்டு நிறுவனங்கள் நாட்டின் கிராமப் பகுதிகளில் இயங்குகின்றன. அவற்றின்நலனுக்காகவே, தலைநகர் டெல்லியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் நேரில் வராமலேயே அவை கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளின் மூலமாக தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மை வாய்ந்ததாக மாறும். நாடாளுமன்ற விதிகளுக்கும் சட்டத்திட்டங்களுக்கும் உட்பட்டே இந்த விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு நிதியை வரை முறையின்றி பெற்றுக் கொள்ளவும் அவற்றைதங்கள் விருப்பம் போல செலவிடவும் இந்தியாவில் எந்த சட்டமும் அனுமதி வழங்கவில்லை. மேலும், அப்படி பெறுவது அடிப்படை உரிமையும் கிடையாது.
இந்த விதிமுறைகளைக் கண்டுநேர்மையான, மக்களுக்கு சேவைசெய்யும் தொண்டு நிறுவனங்கள்அச்சப்பட வேண்டிய அவசியமில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டதை கேள்வி கேட்பது அரசியல் ரீதியிலானது என்பதை உச்ச நீதிமன்றம்உணர வேண்டும். இவற்றை நீதிமன்றங்கள் விசாரிப்பது பொருத்தமாகவும் இருக்காது.
இவ்வாறு பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.