395
சர்வதேச வரலாற்று ஆட்சியாளர்களுக்கு சாட்சிக்கருங்கல் சொரிந்த பின்னும், தனது ஆட்சிச்செதுக்கல்களின் மாட்சிமை மாறாது கரும்பாறைச்சிற்பமாய், குடாக்கடலும், குன்றுமாய், கலையாய், நிலையாய் மறுவற நிலைத்திருக்கிக்கின்ற வீரப்பெருநகரே நம் திருகோணமலை எனும் திருநகர் ஆகும்!
படையெடுத்து வந்த அந்நியருக்கும் வீரம் கற்பித்த, மாவீரர் மாண்புகூறும் வரலாறு படைத்த பொன்னகர் இது!
1782 இல் வன்னியைக் கைப்பற்ற முனைந்த டச்சு வீரர்களை, எதிர்த்துத் தாக்கிய திருகோணமலையும் அதனையண்டியதுமான தமிழ்த்தேச மக்களின் போர்த்திறன் பற்றி எழுதிய ‘லூயி’ என்ற வரலாற்று ஆசிரியர், “டச்சுக்காரர்கள் எத்தனையோ நாடுகளில் போர் புரிந்திருந்தாலும், திருகோணமலை, வன்னி மக்கள் போன்று வீரத்துடன் போரிட்டவர்களை உலகில் வேறெங்கும் அவர்கள் கண்டதில்லை” என்று குறிப்பிடுகிறார்.
“வன்னிப கூட்டங்கள், மாநாடுகளின் அதிகார மையமாக திருக்கோணேச்சரம் காணப்பட்டது” என, 17 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஐரோப்பிய ஆவணங்கள் கூறுகின்றன.
ஆளுகைகள், அவசர கூடுகைகள்,
அதிமுக்கிய அலசுதல்கள், யுத்தத்தின் வியூகங்கள், பொறுப்புள்ள தந்திரங்கள், ரகசியத்தின் பொக்கிஷங்கள், திடமான திட்டமிடல்கள்,
உலக வரலாற்றை வரையறை செய்த தீர்மானங்கள் என, நம் திருமலை மண்ணில் முடிவெடுக்கப்பட்ட வரலாற்று நிர்ணயங்கள் இன்றுவரை முழு உலகும் பின்தொடரும் உலக சரித்திரங்களாய் பெருமை சேர்க்கும் உலகாண்ட பொக்கிஷங்கள்!!
சர்வதேச ஆட்சியாளர்கள் திருகோணமலையைக் கைப்பற்றவென போரிட்டு மடிந்தமை திருமலைகொள் பெருமை! அதே காரணத்துக்காக ‘பண்டார வன்னியன்’ காலத்தில் கண்டி மன்னனுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையில் நடந்த போரில், அந்நேரத்தின் சக்தி கொண்ட ஆங்கிலேயப் பிரதிநிதி ‘ரொபர்ட் நாக்ஸ்’ என்பவர் திருமலையின் ‘மூதூர்’ என்ற பகுதியில் வைத்தே சிறைப்பிடிக்கப்பட்டான்.
‘டச்சுக்காரர்’ மற்றும் ‘ஆங்கிலேயர்’ ஆட்சியை எதிர்த்து திருகோணமலை, வன்னிக்காடுகள் என இடைவிடாது போர் தொடர்ந்த காலமெல்லாம், மறக்க முடியாத மாவீரனாக ‘பண்டார வன்னியன்’ என்கின்ற ‘குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன்’ தடம் பதித்தான்.
கி.மு 205 அளவில் வட தமிழகம் ‘தொண்டை’ நாட்டிலிருந்து வந்த இளவரசன் ‘ஏலேலன்’, பெரும் படையுடன் திருகோணமலையிலேயே முதல் காலடி பதித்தான்.
நடுநிலை தவறாமல் நீதி, நியாயம் , அருள், ஆண்மை, அறிவு என இலங்கை முழுமைக்கும் நல்லாட்சி தந்த தமிழ் மன்னன் ‘எல்லாள’னே ‘ஏலேலன்’ ஆவான்.
(ஆனால், இலங்கையில் ‘தமிழர் தாயக’ தாகம் கொண்டிருந்த தலைவர், தனது போராட்ட ‘அடையாள’மாய் இலங்கை முழுதையும் ஆண்ட தமிழ் மன்னன் ‘எல்லாள’னை நிறுத்தவில்லை;
பாரம்பரியமாய் தன் மூதாதையர்கள் வாழ்ந்த சிறு நிலப்பரப்பில், மதிப்போடும், சுய அதிகாரத்தோடும் வாழ விரும்பிய தமிழ்நில மன்னன்,
பின்னாளில் வெள்ளைக்காரர்கள் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு இன்று போலவே அன்றும் துரோகத்தால் வீழ்த்தப்பட்டு, வீரமரணம் தழுவிய குறுநில மன்னன் ‘பண்டார வன்னிய’னையே தனது போராட்டத்தின் அடையாளமாகக் கொண்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது).
ஆதி தொட்டு இந்நாள் வரை, சர்வதேச வரைபடத்தில் ‘திருமலைத் துறைமுகநகர்’கொள் பெறுமதி தன்னிகர் அற்றதே!
போர்த்துக்கீச ‘கலபதி டொன் லொரேன்கோ டி அல்மேதா’ தலைமையில் 1505 இல் புறப்பட்ட கப்பலொன்று, புயலில் சிக்கித்தவித்து பின்னர் ‘கொழும்பு’ கரையை அடைந்த போது, அங்கே முதலில் வர்த்தக தளத்தை அமைத்தபின், இங்கிருந்த அரசியல் உட்பூசல்களைப் பயன்படுத்தி தமது பலத்தை விஸ்தரித்து, (1580 இல் போர்த்துக்கீசத் தளபதி, ‘கோட்டே’ மன்னனுக்கு வாரிசு இல்லாத காரணத்தை சாதகப்படுத்தி, இலங்கையை போர்த்துக்கீச மன்னன் பெயரில் உயில் எழுதிக்கொண்ட பின்), 1597 இல் ‘கோட்டே’ மன்னன் இறக்க, இலங்கையின் (திருமலையை முக்கிய ஸ்தலமாகக் கொண்ட) கரையோரத்தை ‘போர்த்துக்கீசர்’ வசப்படுத்தினர். பின்னர், கண்டி இராசதானியுடன் 1638 இல் செய்யபட்ட ஒப்பந்தத்தின் காரணமாக படிப்படியாக ‘போர்த்துக்கீசர்’ வசமிருந்த கரையோரப் பகுதிகள் ‘ஒல்லாந்த’ரால் கைப்பற்றப்பட்டன.
1796 இல் ‘ஒல்லாந்தர்’ ஆங்கிலேய கப்பல்களை திருகோணமலை துறைமுகத்தில் தரிக்க இடமளிக்காததால், ஆங்கிலேயர் முதலில் ‘திருகோணமலை’யையும் பின்னர் இலங்கையின் மற்றைய கரையோர பகுதிகளையும் கைப்பற்றினர்.
(பின்னர், 1948 இல் ஒட்டுமொத்தமாய் இலங்கையிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்).
நாடுகளிடையே வளர்ந்து வரும் பொருளாதார ஒருங்கிணைவுகள், பூகோள மயமாக்கல் (Globalization) போன்றன இலங்கையின் ‘பொருளாதார கேந்திர’ முக்கியத்துவத்தை அதிகரித்து வந்தன. இந்த முக்கியத்துவத்தின் காரணமாகத் தான் உலகநாடுகள் ‘திருமலை’ மீதான தங்கள் ஈடிணையற்ற நாட்டத்தை தொடர்ச்சியாக ஈடுபடுத்திக் கொண்டே வந்தன, வருகின்றன.
ஒரு நாட்டின் பொருளாதாரம், வரலாற்றுக் காலம் முதலாக இன்றைய நிலை வரை, கடல் மீதான ஆளுமை சார்ந்ததாகவே இருந்து வருகிறது!!
சோழர்களின் பொருளாதாரப் போர்கள் இந்த உண்மையைத் தெளிவாக்கும்.
பல்லவர் ஆட்சிக் காலத்திலிருந்தே பெருகி வந்த கடல் வாணிபம் பிற்கால சோழர் ஆட்சிக் காலத்தில் உன்னத நிலையை அடைந்தது. ஆயினும் வங்கக் கடலில் பாரசீகர், அரேபியர், சீனர்களின் வாணிபப் போட்டிநிலை 10, 11 ஆம் நூற்றாண்டுகள் முதலே வரலாற்றுடன் கூடவே சேர்ந்து பயணித்தது.
தமிழர் கடல் வாணிபத்தைக் காக்க வேண்டி ‘இராஜேந்திர சோழன்’ கி.பி.1022 இல் பல கலங்கள் செலுத்தி, தென்கிழக்காசிய நாடுகளான ‘சுமாத்திரா’, ‘மலேயா’ போன்ற பிரதேசங்களில் ஆட்சியில் இருந்த ‘சிறிவிஜயா’, ‘மலையூர்’, ‘பண்ணை’, ‘இலமூரியதேசம்’, ‘கடாரம்’, ‘மயூரிடங்கம்’
‘இலங்கசோகம்’, ‘மாயாபள்ளம்’
‘மதமலிங்கம்’, ‘தலைதக்கோலம்’, என்ற ஆட்சிகளை போரில் வென்றான்.
சர்வதேச எண்ணெய் வர்த்தகத்தில் 50% மலாக்கா நீரிணை வழியாகவே இடம்பெறுவது வரலாறறிந்ததே. உலக வர்த்தகப் போக்குவரத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்தப் பகுதியில் தான் நடைபெறுகிறது. ‘ஜப்பா’னின் 80% வீதமான எண்ணெய்ப் பயன்பாடுகளுக்கு இவ்வழி பதையமைக்கிறது. ‘சீனா’வை ‘ஆசியா’வுடன் இணைக்கும் ‘மலாக்கா நீரிணை’யினையே சீனா தனது 60% எண்ணெய்த் தேவைகளின் போக்குவரத்திற்காக நம்பி இருக்கிறது என்றால் இவை யாவும் இக்கடற்பகுதியின் முக்கியத்துவத்தை நன்கு உணர்த்தும்!
உலக கடல் போக்குவரத்தில் ‘சோதனை நிலையம்’ (check point) என்று சொல்லக்கூடிய பகுதிகள் உள. அதாவது கடல்வழியில் மிகக் குறுகலான பாதை உடைய பகுதிகள் ‘சோதனை நிலையங்கள்’ எனப்படுகின்றன. இவ்வாறு குறுகலான பாதை உடைய கடல் பாதையை ஏதேனும் ஒரு நாட்டின் படையோ அல்லது தீவிரவாத அமைப்போ அடைத்து விட்டால் அதனை விடுவிப்பது கடினமாகும். அவ்வாறான ஒரு சோதனை நிலையம் உள்ள இடம் தான் ‘மலாக்கா நிரிணை’ ஆகும். இதில் சுமார் 2.5கி.மீ அகலம் மட்டுமே கொண்டது. இதனை ஏதேனும் ஒரு நாட்டின் கடற்படையோ, தீவிரவாத அமைப்போ அடைத்து விட்டால், உலகின் மிக முக்கியமான வர்த்தகப் போக்குவரத்து பாதிக்கப்படும். இது உலகப் பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.
இந் நிலையில் தான் இந்து சமுத்திரம்சூழ் இயற்கைத்துறைமுகம் கொண்ட திருமலை மீதான சர்வதேசங்களின் ஆதிக்கம் முக்கியத்துவம் பெறுகிறது! பிரச்சனையற்ற கப்பற் போக்குவரத்து, தங்களுடைய எண்ணெய்க் கப்பல்களின் பாதுகாப்பு, தமது பொருளாதார தேவைகளுக்கான பாதுகாப்பு, இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு, கடற்பரப்பில் இருக்கின்ற எண்ணெய் வளங்களைக் கண்டறிவது, போன்றவற்றுடன் இந்த கடல்வழியில் இருக்கும் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வது என்ற அடிப்படையிலே தான் உலக நாடுகளின் நிலை அமைந்திருக்கிறது!
‘கனக சூரியசிங்கையாரிய’னும் புதல்வரும் வடதேசத்திலிருந்து ஈழத்திற்குத் திரும்பிய போது, திருமலையில் தங்கிநின்றே நாட்டை மீட்டனர் என்கிறது ‘யாழ்ப்பாண வைபவமாலை’.
நம் மண்ணின் வீர வரலாறு வீசிய ‘வாகை’ வாடியது ஒரு தசாப்தம் முன்! எட்டப்பர்கள் மகிழ்ந்த போதும், வாடிய ‘வாகை’ வீசிய வாசம் தமிழ்க்காற்றில் தரித்தே நிற்கின்றது என்றோ ஓர் நாள் கார்மேகம் வார்க்குமென!
இன்று சமகால ஆட்சியாளர் பொருளாதார வீழ்ச்சியென்ற போர்வையில் அங்குலங்களாய், அடியடியாய் அந்நியர்க்கு அடகு வைக்கின்றவரை! திருமலைத் துறைமுகத்திலும் 33,000 ஏக்கர்கள் கொண்ட பெருநிலபரப்பு அண்மையில் அமெரிக்கருக்கான அடகு பொருளாகியது!
தமிழினத்தின் ‘விடுதலை தாக’ வீர செயற்பாடுகளில் கூட, தமிழ்க்கடலோரம் சூழ்ந்த திருமலைத் துறைமுகத்தின் ஒரு அங்குலமல்ல, ஒரு துகள் மண்ணாயினும் அந்நியர் கைவசம் சென்று விடாது உயிராய்ப் பேணிப்பாதுகாக்கப்பட்டிருந்ததில் தமிழர் வீரம் பறைசாற்றப்பட்டது சத்தியமே!! இன்னும் வாடல் ‘வாகை’யின் வாசனை வானெங்கும் வீசும்!!
வீரத்தமிழ்மண் மரிக்கவில்லை. மாரி வரை காத்திருக்கிறாள். கருக்கொண்ட கார்மேகம் அவள் திருக்கொண்ட திரள்கூந்தலின் வாச’வாகை’ நனைக்குமென்றுறுதி கொண்டதால்!!
-
பானு சுதாகரன்
திருகோணமலை,இலங்கை.
add a comment