வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினரின் வீடுகள் மீது வன்முறை கும்பல் தாக்குதல்: 20 வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாகின
வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினருக்கு எதிராக கடந்த வாரம் தொடங்கிய வன்முறை தடையின்றி தொடர்கிறது. ராங்பூர் மாவட்டத்தில் இந்துக்களின் வீடுகள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி, தீ வைத்தது. இதில் 20 வீடுகள் தீக்கிரையாகின.
தசரா பண்டிகையை முன்னிட்டு வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் கடந்த வாரம் துர்கா பூஜை கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதில் கமில்லா என்ற இடத்தில் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குரான் அவமதிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த புதன்கிழமை அந்நாட்டில் இந்துக்களுக்கு எதிராக வன்முறைகள் தொடங்கின. இதில் ஹாஜிகஞ்ச் நகரில் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயரிழந்தனர். இதையடுத்து வன்முறைக்கு மேலும் இருவர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் ராங்பூர் மாவட்டம், மஜிபாரா என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு, மீனவ இந்துக்களின் காலனியில் ஒரு கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தியது. இதில் 66 வீடுகள் சேதமடைந்தன. பிறகு வீடுகளுக்கு அக்கும்பல் தீ வைத்ததில் சுமார் 20 வீடுகள் எரிந்து சாம்பலாகின.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, ‘அந்த காலனியை சேர்ந்த இந்து இளைஞர் ஒருவர் தனது முகநூல் பதிவில் இஸ்லாம் மதத்தை அவமதித்தாக வதந்தி பரவியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து இந்த இளைஞரின் வீட்டுக்கு போலீஸார் பாதுகாப்பு வழங்கினர். எனினும் மற்ற வீடுகள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தி, தீ வைத்தது’ என்றனர்.
இந்த தாக்குதலில் ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் அதன் மாணவர் அமைப்பான இஸ்லாமி சத்ரா ஷிபிரை சேர்ந்தவர்கள் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
வங்கதேசத்தில் வன்முறை யாளர்கள் மதப் பாகுபாடின்றி தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த வாரம் எச்சரித்தார். உள்துறை அமைச்சர் அசாதுசமான் கான் நேற்று முன்தினம் கூறும்போது, ‘துர்கா பூஜை பந்தல்கள் திட்டமிட்டு தாக்கப்பட்டுள்ளன. இதில்தொடர்புடையவர்களுக்கு முன்மாதிரியான தண்டனை வழங்கப்படும்’ என்றார்.
இந்த எச்சரிக்கைகளுக்கு பிறகும் வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை தொடர்கிறது. வன்முறை மற்றும் சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வு ஏற்படுத்தியது தொடர்பாக பலரை அரசு கைது செய்துள்ளது.
வன்முறைக்கு எதிராக அண்டை நாடான இந்தியாவிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.