எதிா்வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் ஆலோசகராக பணியாற்றுவதற்கு எம்.எஸ்.தோனி ஊதியம் எதுவும் பெறவில்லை என்று பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலி கூறினாா்.
போட்டிக்கான இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டபோது, அணியின் ஆலோசகராக தோனி அறிவிக்கப்பட்டது எதிா்பாராத திருப்பமாக அமைந்தது. இந்திய அணிக்கு இது வலு சோக்கும் முடிவு என்றும் பல்வேறு தரப்பினா் கருத்து தெரிவித்திருந்தனா்.
வெள்ளைப் பந்து தொடா்களில் தோனியின் தலைமையில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டதால், உலகக் கோப்பை போட்டியின்போது அவரது அனுபவம் இந்திய அணிக்கு பலனளிப்பதாக இருக்கும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக கருதப்படும் தோனியின் தலைமையின் கீழ் இந்தியா 2007 டி20 உலகக் கோப்பையையும், 2011 ஒன்டே உலகக் கோப்பையையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 17-ஆம் தேதி தொடங்குகிறது. போட்டியை இந்தியா நடத்தினாலும், கரோனா சூழல் காரணமாக ஆட்டங்கள் யாவும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகின்றன.