பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றுப்போட்டியில் பெலாரசின் விக்டோரியா அசரென்கா மற்றும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா ஆகியோர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இந்திய நேரப்படி இன்று காலை நடந்த 3வது சுற்றுப்போட்டியில் மகளிர் ஒற்றையர் சர்வதேச தரவரிசையில் தற்போது 7ம் இடத்தில் உள்ள உக்ரெனின் எலினா ஸ்விடோலினாவுடன், ருமேனியாவின் சொரான கிர்ஸ்டியா மோதினார்.
இதில் 4-6, 6-4, 7-6 என 3 செட்களில் போராடி, கிர்ஸ்டியாவை வீழ்த்தி, ஸ்விடோலினா அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு 3வது சுற்றுப் போட்டியில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசெரென்காவுடன், செக். குடியரசின் பெட்ரா கிவிடோவா மோதினார். மகளிர் தரவரிசையில் தற்போது கிவிடோவா 11வது இடத்திலும் அசரென்கா 32வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் அசரென்கா 7-5, 6-4 என நேர் செட்களில் எளிதாக வென்று, 4ம் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
பெலாரசின் அலியாக்சாண்ட்ரா சாஸ்னோவிச், ருமேனியாவின் முன்னணி வீராங்கனை சிமோனா ஹாலேப்பை 7-5, 6-4 என நேர் செட்களில் வீழ்த்தி 4ம் சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, ஷெல்பி ரோஜர்ஸ் ஆகியோரும் 3ம் சுற்றில் வென்று, அடுத்து சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.