மசூதியில் நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் 100 க்கும் மேற்பட்டோர் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் அதிபர் ஆட்சி கவிழ்க்கப்பட்டு தற்போது தலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆட்சி அதிகாரம் வந்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறினர். தற்போது அமைச்சரவை அமைக்கப்பட்டு தலிபான்கள் ஆட்சி செய்து வரும் நிலையில், அவர்களுக்கு தலைவலியாக ஐஎஸ் தீவிரவாத அமைப்பு உள்ளது.
இந்த நிலையில் இன்று நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள குந்தூஸ் மாகாணத்தில் மசூதி ஒன்றில் திடீரென குண்டு வெடித்தது. இதில் 100 பேர் பலியானதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
எனினும், ஐஎஸ் பயங்கரவாத இயக்கமே சமீப காலமாக ஆப்கானிஸ்தானில் இது போன்ற கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருவது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டுப்படைகள் வெளியேறிய பிறகு அங்கு நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது.