அமெரிக்காவின் இண்டியன் வெல்ஸ் நகரில் பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நேற்று அமெரிக்க வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ்(73வது ரேங்க்), பிரிட்டன் வீராங்கனை ஹீதர் வாட்சன்(57வது ரேங்க்) ஆகியோர் மோதினர்.
டை பிரேக்கர் வரை நீண்ட முதல் செட்டை ஹீதர் 7-6 என்ற புள்ளி கணக்கில் வசப்படுத்தினார். ஆனால் 2வது சுற்றை நீண்ட நேரம் போராடி 7-5 என்ற புள்ளி கணக்கில் தனதாக்கிய ஸ்லோன், 3வது செட்டை 6-1 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றினார்.
அதனால் 2 மணி 50 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தை 2-1 என்ற செட்களில் வென்ற ஸ்லோன் 2வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில் கஜகிஸ்தான் வீராங்கனை யுலியா புடின்சேவா(43வது ரேங்க்), ஜெர்மனி வீராங்கனை ஆண்டிரியா பெட்கோவிக்(74வது ரேங்க்) உடன் மோதினர். அதில் புடின்சேவா ஒரு மணி 34 நிமிடங்களில் 7-6, 6-1 என நேர் செட்களில் பெட்கோவிக்கை வீழ்த்தி 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.