மத்திய அரசின் சார்பில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை துவக்கி வைத்து, மக்களுடன் நேரடியாக கலந்துரையாடும் வகையில், அடுத்த சில வாரங்களில் ஜம்மு – காஷ்மீருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மூன்று நாட்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திற்கு இருந்து வந்த சிறப்பு அந்தஸ்து 2019ல் ரத்து செய்யப்பட்டது. இதைஅடுத்து, ஜம்மு – -காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில், அங்கு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை துவங்கியது.இத்திட்டங்கள் குறித்த ஆய்வு மற்றும் விரைவுபடுத்துதல் ஆகியவற்றை மத்திய அமைச்சர்கள் அனைவரும் அவ்வப்போது நேரடியாக சென்று கண்காணிக்க வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியிருந்தார். இதன்படி, கடந்த ஆண்டு ஜனவரியில் மத்திய அமைச்சர்கள் 36 பேர், ஜம்மு – காஷ்மீருக்கு சென்று, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். அப்போது மக்களை நேரடியாக சந்தித்து அவர்களோடு உரையாடினர்.
இது தொடர்பான அறிக்கைகளையும் பிரதமர் அலுவலகத்தில் அவர்கள் தாக்கல் செய்தனர். இந்நிலையில் தான், ‘மக்களை நோக்கி’ என்ற இந்த திட்டத்தின் நிறைவு கட்டமாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு – காஷ்மீருக்கு செல்ல உள்ளார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், வரும் 22ல் அவரது பயணம் துவங்கும் எனக் கூறப்படுகிறது. அங்கு மூன்று நாட்கள் தங்கியிருந்து திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதுடன், மக்களுடனும் நேரடியாக கலந்துரையாடவும் அமித் ஷா திட்டமிட்டு உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.