உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடந்த 10ம் தேதி இரவு விமானம் மூலம் லக்னோ சென்றார். அங்கிருந்து, காரில் லக்கிம்பூர் மாவட்டம் சென்ற அவரை பன்வீர் கிராமத்தின் எல்லையிலேயே தடுத்து நிறுத்திய காவல்துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து, சித்தாப்பூர் விருந்தினர் இல்லத்தில் தடுப்புக் காவலில் பிரியங்கா காந்தி வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று காலை பிரியங்கா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “உங்கள் அரசு கடந்த 28 மணிநேரமாக எந்த வழக்கும் பதிவு செய்யாமல் என்னை தடுப்புக் காவலில் வைத்துள்ளது; ஆனால், உணவளித்தவர்களை கொன்ற நபரை இதுவரை கைது செய்யப்படவில்லை ஏன்..?” என மோடியை டேக் செய்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள பன்வீர்பூர் கிராமத்துக்கு துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளா்யா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் ஞாயிற்றுக்கிழமை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த பாஜகவினரின் வாகனங்கள் மீது கல்வீச்சு நடைபெற்றதாகவும், இதனால் கார்கள் நிலை தடுமாறி விவசாயிகள் மீது மோதியதாகவும், ஆத்திரமடைந்த விவசாயிகள், பாஜகவினரின் வாகனத்துக்கு தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட இந்த வன்முறையில் விவசாயிகள் 4 பேர், பாஜகவினர் 4 பேர் உட்பட 9 பேர் பலியாகியுள்ளனர். இந்த வன்முறை சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.