உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்தபோது, விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களின் வருகையை கண்டித்து, கறுப்புக்கொடி ஏந்தி வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் நுழைந்தது. இதில் கார் மோதி ஏராளமான விவசாயிகள் காயமடைந்தனர். இந்த விபத்தில் இரண்டு விவசாயிகள் உயிரிழந்த நிலையில், பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக லக்கிம்பூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அருண்குமார் சிங், நான்கு விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். விவசாய சங்கங்கள் அமைச்சருடன் பாதுகாப்புக்கு வந்த ஒரு வாகனத்தில் அவரது மகனும், உறவினர்களும் வந்துள்ளனர். அந்த காரே விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
தொடர்ந்து, நாளை பிற்பகல் 1 மணிக்கு நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட மாஜிஸ்திரேட் அலுவலங்கள் முன்பு போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த சம்பவத்தை தொடர்ந்து, விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாய்ட் மற்றும் பஞ்சாப், ஹரியானவை சேர்ந்த விவசாயிகள் உத்தர பிரதேசம் விரைந்துள்ளனர்.
இதனிடையே, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் சென்ற கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழந்ததாகவும், 8 விவசாயிகள் படுகாயம் அடைந்ததாகவும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், அமைதியாக போராடிய விவசாயிகளை நசுக்கும் மத்திய உள்துறை அமைச்சரின் இச்செயல் மனிதாபிமானமற்றது, மிக கொடூரமானது என கருத்து தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த வன்முறை சம்பவத்தின் போது தனது மகன் அங்கு இல்லை என்றும் அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது என்றும் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.