அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்ய விதிக்கப்பட்ட தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
கருவில் இருக்கும் சிசுவுக்கு இதயத் துடிப்பு கண்டறியப்பட்டால் அதற்கு பின் அக்கருவை கலைப்பதற்கு தடை விதிக்கும் சட்டம் நேற்று முன் தினம் முதல் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அமலுக்கு வந்துள்ளது. இதனால் ஏறத்தாழ கருக்கலைப்பு என்பதே செய்ய முடியாத நிலை அங்கு எழுந்துள்ளது. அமெரிக்க உச்ச நீதிமன்றமும் கருக்கலைப்புக்கு எதிரான தீர்ப்பையே அளித்துள்ளது. அமெரிக்காவின் பிற பகுதிகளிலும் கருக்கலைப்புக்கு கடும் கட்டுப்பாடுகள் வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெக்சாஸில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். என் உடல், என் விருப்பம், என் உரிமை என அவர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக வாஷிங்டன் உள்ளிட்ட மற்ற நகரங்களிலும் போராட்டங்கள் வலுக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் 50 மாகாணங்களில் உள்ள 600 நகரங்களில் போராட்டம் விரிவடைய உள்ள நிலையில் அவற்றில் 25 லட்சம் பேர் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது. எனினும் கருக்கலைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை ஆதரித்தும் அதை எதிர்ப்பவர்களை கண்டித்தும் சில தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.