89views
இவர்…
அரசியலில் இருந்தும் அரசியல் செய்யத் தெரியாத ஞானி…
அகில உலகையே அதிர வைத்த அதிசய பொக்ரான் விஞ்ஞானி…
ராஷ்டிரபதி அரண்மனையில் உலவிய அதிசய புத்தன்..
கோட்டும் சூட்டும் போட்டுக் கொண்டு நடந்த ஆன்மீகச் சித்தன்…
எல்லோரும் குத்து விளக்குகளை ஏற்றிய நேரத்தில்
இவர் மட்டும்தான் கனவு புத்தி விளக்குகளை ஏற்றினார்… அதனை
ஒவ்வொரு பள்ளிக்கூடமாய் சென்று ஒவ்வொரு மாணவர் உள்ளத்திலும் பூட்டினார்…
அரசராய் இருந்த பெருங்கோதான் என்றாலும்
மனைவி மக்களைப் பெறாத துறவற இளங்கோ…
செய்தது சிலப்பதிகாரம் அல்ல
இந்திய சிறப்பதிகாரக் கலையதிகாரம் …
விண்வெளி ஏவுகணையதிகாரம் …
அமைதியாய் இருந்தே வெடித்த இவரும்
காந்தியைப் போலத்தான்…
ஒருவகையில் காந்தி கண்ட தேசக் கனவின்
இஸ்லாமியப் பேரரசின் இரண்டாம் கலிபா உமரைப் போலத்தான் ..
இவர்… விதவிதமான ரோஜாக்கள் பூத்துக் குலுங்கும்
மொகல் தோட்டத்தில்
காலம் உள்ளவரை ஒளி வீசிக்கொண்டிருக்கும் தமிழ் அகல்…
தமிழ் அறியா வடநாட்டு
ராஜாக்கள் சபைகளிலும் கொண்டு சேர்த்தது வள்ளுவப்புகழ்…
சமய நல்லிணக்கத்துக்கு இவர் ஒரு சான்றாதாரம்…
இராமேஸ்வரத்துக் கோவில் இசை வீணை…
வாட்டிக நகரத்தின் வண்ண அங்கி…
முஸ்லிம்கள் தலையில் தொப்பி சுற்றிக் கட்டும் சுந்தரத் தலைப்பா…
வாழ்ந்ததெல்லாம் இந்திய அரசின் தலைப்பா…
வந்ததெல்லாம் உலக நாளிதழ்களின் அன்றாடச் செய்தித் தலைப்பா…
மற்றவருக்குப் பெரும் மலைப்பா…
வென்றதெல்லாம் கனவு கண்ட கடும் உழைப்பால்…
இவர்…
இளைய தலைமுறையினருக்குப்
புதிய கனவுகளைப் பூட்டி விட்ட புரட்சி…
அறிவியல் உலகின் ஆன்மீக மலர்ச்சி….
இவர்… பிறந்தது இராமேஸ்வரக் கடற்கரை…
ஆனால் இவர்தான்
இந்திய அறிவியல் உலகின் விளக்கக் கலங்கரை…
-
அத்தாவுல்லா
-
2100 மணித்துளிகள் உலகச் சாதனை நிகழ்வில் வாசித்த கவிதை
add a comment