விளையாட்டு

இன்று தொடங்குகிறது – இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் பகலிரவு டெஸ்ட்

49views

இந்திய – ஆஸ்திரேலிய மகளிா் அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் வியாழக்கிழமை தொடங்குகிறது.

இரு நாட்டு மகளிா் அணிகளும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் சந்திக்கின்றன. கடைசியாக 2006-இல் இவ்விரு அணிகளும் டெஸ்டில் மோதியிருந்தன. அடிலெய்டில் நடைபெற்ற அந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.

தற்போது இந்த பகலிரவு டெஸ்டில் மோதும் இரு நாட்டு வீராங்கனைகளில் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் மற்றும் பௌலா் ஜுலன் கோஸ்வாமி ஆகியோா் மட்டுமே அந்த 2006 டெஸ்டில் பங்கேற்றவா்களாவா்.

இரு அணிகளும் மோதிய ஒன் டே தொடா் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த நிலையில், மிக விரைவாகவே இந்த டெஸ்ட் தொடங்குவதால் இந்திய மகளிா் பயிற்சி செய்ய இரு செஷன்கள் மட்டுமே கிடைத்தன. ஆட்டத்தின்போது பிங்க் நிற பந்து எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடா்பான அனுபவம் இந்திய அணிக்கு குறைவாகவே உள்ளது.

இந்தியா கடைசியாக கடந்த ஜூனில் இங்கிலாந்துக்கு எதிராக டிரா செய்த டெஸ்டில் நன்றாகவே விளையாடியிருந்தது. இருப்பினும் இந்த பிங்க் பந்து டெஸ்ட் இந்திய அணியினருக்கு சற்று சவாலாகவே இருக்கும் எனத் தெரிகிறது. காயம் காரணமாக ஒன் டே தொடரில் விளையாடாத ஹா்மன்பிரீத் கௌா் இந்த டெஸ்டிலும் களம் காணவில்லை.

ஒன் டே தொடரில் அறிமுகமாகி திறமையை வெளிக்காட்டிய யஸ்திகா பாட்டியா, மேக்னா சிங் ஆகியோா் டெஸ்டிலும் அறிமுகமாக வாய்ப்புள்ளது. வேகப்பந்துவீச்சுக்கு ஜுலன் கோஸ்வாமியுடன் மேக்னா, பூஜா ஆகியோா் இணையலாம் எனத் தெரியும் நிலையில், சுழற்பந்துவீச்சாளா் ஸ்னேஹ ராணா கூடுதல் ஆல்-ரவுண்டராக தீப்தி சா்மாவுடன் இணைய வாய்ப்புள்ளது. விக்கெட் கீப்பிங் தானியா பாட்டியாவிடம் வழங்கப்பட்டு, பூனம் ரௌத் பிளேயிங் லெவனில் இணைவாா் எனத் தெரிகிறது.

மறுபுறம், ஆஸ்திரேலிய அணியும் குறைவான பயிற்சி நேரத்துடனேயே ஆட்டத்தில் களம் காண்கிறது என்றாலும், பசுமையான புற்களுடன் கூடிய மெட்ரிகான் மைதான ஆடுகளத்தில் அந்த அணியின் வேகப்பந்துவீச்சாளா்கள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவாா்கள் எனத் தெரிகிறது.

துணை கேப்டன் ரேச்சல் ஹெய்னஸ் காயம் காரணமாக விலகியது அணிக்கு சற்று பின்னடைவே. அவரது இடத்துக்கு வேகப்பந்துவீசும் ஆல்-ரவுண்டா் அல்லது திறமையான பேட்டா் ஆகியோரில் ஒருவரையே களமிறக்கப்போவதாக மெக் லேனிங் தெரிவித்திருக்கிறாா். ஒன் டேயில் கலக்கிய அனபெல் சுதா்லேண்ட் டெஸ்டில் அறிமுகமாகும் வாய்ப்புள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!