இனம், மொழி, ஜாதி, அந்தஸ்து, நாடு என அனைத்தையும் கடந்தது தான் காதல். வரலாற்றிலும், சமகால வாழ்விலும் காதலுக்கு உதாரணமாக பல இணையர்கள் அடையாளமாக உள்ளனர். அதில் புதுவரவாக இணைந்துள்ளார் ஜப்பான் நாட்டை சேர்ந்த இளவரசி.
அரச குடும்பத்தை சேர்ந்த 29 வயதான மேக்கோ (Mako) தான் அந்த இளவரசி. இவர் ஜப்பான் நாட்டின் பேரரசர் நருஹித்தோவின் (Naruhito) மருமகள். தன்னுடன் பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்த கெய் கொமுரோ-வை (Kei Komuro) காதலித்து வந்துள்ளார். இருவரும் தங்களது காதலை திருமண பந்தத்தில் இணைத்துக் கொள்ள விரும்பினர்.
ஜப்பான் நாட்டு வழக்கப்படி அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களில் ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் அவர் அரசு குடும்பத்தில் இருந்து விடுவிக்கப்படுவார். இருப்பினும் சுகபோகமாக அவர் வாழ சன்மானம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் இளவரசி மேக்கோவுக்கு சுமார் 95 கோடி ரூபாய் தர அரச குடும்பம் முன்வந்துள்ளது. இருப்பினும் தனக்கு அந்த தொகை வேண்டாமென மேக்கோ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளவரசி மேக்கோவுக்கு தனது காதலனை விரைவாக கரம் படிக்க வேண்டுமென்பதே விருப்பமாக உள்ளதாம். அவரது இந்த செயல் பலரது மனதினை கவர்ந்துள்ளது.
அடுத்த மாதம் அவர்களுக்கு திருமணம் நடைபெற வாய்ப்புள்ளதாக ஜப்பான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு முன்னதாக அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் வேறொருவரை திருமணம் செய்து கொண்ட போது சன்மானத்தை பெற்றுக் கொள்ள மறுப்பு சொன்னது இல்லையாம். அதனால் இந்த விவகாரம் குறித்து அரச குடும்பத்தினர் ஆலோசித்து வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.