வங்கக் கடலில் உருவான குலாப் புயல் நேற்று இரவு ஆந்திரா- ஒடிஷா இடையே கரையைக் கடந்தது. குலாப் புயல் கரையைக் கடந்த போது மணிக்கு 95 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. குலாப் புயல் கரையை கடந்த நிலையில் ஆந்திரா, ஒடிஷாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இக்காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து புயலாக உருவானது.
இப்புயலுக்கு குலாப் என பெயரிடப்பட்டது. பாகிஸ்தான் இந்த பெயரை பரிந்துரைத்திருந்தது. பொதுவாக செப்டம்பர் மாதங்களில் வங்க கடலில் புயல்கள் உருவாவது இல்லை. 2018-ல் டாயி என்ற மற்றொரு புயல் வங்கக் கடலில் உருவானது. இந்த நிலையில் குலாப் புயல் உருவானது.
குலாப் புயல் ஆந்திராவின் விசாகப்பட்டினம், ஒடிஷாவின் கோபால்பூர் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து இரு மாநில கடலோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டன. ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடன் ஒடிஷா முதல்வர் நவீன்பட்நாயக் வீடியோ கான்பரன்ஸ் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர். குலாப் புயலை எதிர்கொள்ள அனைத்து உதவிகளையும் செய்வதாக மத்திய அரசும் உறுதி அளித்திருந்தது.
ஆந்திராவின் கலிங்கபட்டினத்திலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது குலாப் புயல். இது வடக்கு திசையில் நகர்ந்து இரவு 9 மணியில் வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிஷா இடையே கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 90 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.
புயல் கரையை கடந்த போது இரு மாநிலங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த புயலானது இன்று அதிகாலை 2.30 மணிக்கு வலுவிழந்து ஆழ்ந்த் தாழ்வுநிலையாக வடக்கு ஆந்திரா கடற்பரப்பில் நிலை கொண்டுள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆந்திராவை ஒட்டிய ஒடிஷா மாநில மாவட்டங்களில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.