நாடு தழுவிய பிரதம மந்திரி டிஜிட்டல் சுகாதார இயக்கத்தை பிரதமர் மோடி வரும் 27-ம் தேதி தொடங்கி வைக்கவுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
இதுகுறித்து மாண்டவியா நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘பிரதமர் மோடி கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் ‘தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம்’ என்ற புதிய பிரச்சாரம் தொடங்கப்படும் என அறிவித்தார். இதன்படி ஒவ்வொரு இந்தியருக்கும் சுகாதார அடையாள அட்டை வழங்கப்படும். ஒவ்வொரு முறையும் நீங்கள் மருத்துவரிடம் அல்லது மருந்து கடைக்கு செல்லும் போது, உங்கள் உடல்நிலை, அதற்கு எடுத்துக் கொள்ளும் சிகிச்சை மற்றும் மருந்து தொடர்பான விவரம் சுகாதார அட்டையில் பதிவாகும். மருத்துவரிடம் சந்திப்புக்கான நேரம் பெறுவது முதல் சிகிச்சை பெறுவது வரை அனைத்தும் அந்த அட்டையில் இடம்பெறும்’ என்று கூறியுள்ளார்.
நோயாளிகள் டெலிமெடிசின் மூலமும் சிகிச்சைக்கான ஆலோ சனைகள் பெறவும் இ-பார்மசி மூலம் மருந்துகளை பெறவும் இந்த அட்டை பயன்படும்.
இத்திட்டம் புதுச்சேரி, சண்டிகர், லடாக், லட்சத்தீவுகள், அந்தமான் நிகோபார் தீவுகள், டாமன், டையூ, தாத்ரா மற்றும் ஹாவேலியில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலை யில் இத்திட்டத்தை நாடு முழுவதிலும் பிரதமர் மோடி 27-ம் தேதி தொடங்கி வைக்கவுள்ளதாக அமைச்சர் மான்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
மத்திய அரசின் முன்னோடித் திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம்’ கடந்த 2018, செப்டம்பர் 23-ல் தொடங்கப்பட்டது. 10.74 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு (54 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகள்) ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சேவை வங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மூலம் ரூ.26,400 கோடி மதிப்புள்ள 2 கோடிக்கும் மேற்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் 3-ம் ஆண்டு தினத்தையொட்டி மத்திய சுகாதார அமைச்சர் மான்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘மூன்று வருட சேவை மற்றும் செழிப்பு! விளிம்புநிலை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே பிரதமர் மோடியின் சிந்தனையாக உள்ளது.
கோடிக்கணக்கான மக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் இலவச சிகிச்சை வழங்கியுள்ளது. இந்த திட்டம் ஏழைகளுக்கு ஒரு வரப்பிரசாதம். செலவுமிக்க சிகிச்சைகளை அணுக முடியாத ஏழைகளுக்கு சிறந்த சிகிச்சையை இத்திட்டம் உறுதி செய்கிறது. உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டமான ‘ஆயுஷ்மான் பாரத்’ 50 கோடி பயனாளிகள் இலவச சிகிச்சை பெற உதவுகிறது’ என்று கூறியுள்ளார்.