ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத் தில் டெல்லி அணி அபார வெற்றிபெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் நேற்று மோதின. டேவிட் வார்னர் மற்றும் சஹா களமிறங்கினர். அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர், டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். அடுத்த வந்த வீரர்களும் டெல்லி அணியின் சிறப்பான பந்துவீச் சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஐதராபாத் அணி நிர்ணயிக்க பட்ட 20 ஒவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அப்துல் சமாத் 28 ரன்களும், ரஷித் கான் 22 ரன்களும் எடுத்தனர்.
டெல்லி அணியில் ரபடா 3 விக்கெட்டுகளையும், நோர்ஜோ மற்றும் அக்சர் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் பிருத்வி ஷாவும் ஷிகர் தவானும் களமிறங்கினர். பிருத்வி ஷா 11 ரன்களில் கேட்ச் ஆனதும் ஷிகர் தவானுடன், ஸ்ரேயாஸ் அய்யர் இணைந்தார். இருவரும் நிதானமாக ஆடினர். தவான் 42 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக கேப்டன் ரிஷப் பண்ட் வந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப்பும் ஸ்ரேயாஸும், அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். டெல்லி அணி 17.5 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் அய்யர் 47 ரன்களும், ரிஷப் 35 (21) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஐதராபாத் அணி சார்பில் கலில் அகமது மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றிபெற்றது.