தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் பெண்களை அனுமதிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
பாதுகாப்புப் படையில் பெண்களுக்கும் நிரந்தர பணி வழங்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கை கடந்த மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், ”பாதுகாப்புப் படையில் பெண்களுக்கும் நிரந்தர பணி வழங்க வேண்டும். அதற்கேற்ப தேசியபாதுகாப்பு அகாடமி (என்டிஏ) நடத்தும் நுழைவுத் தேர்வில் பெண்களையும் அனுமதிக்க வேண்டும்” என்று மத்திய அரசுக்குஇடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு தெரிவிக்கையில், ”என்டிஏ நுழைவுத் தேர்வில் பெண்கள் பங்கேற்க அடுத்த ஆண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிடப்படும்.
பாதுகாப்புப் படையில் பெண்களை சேர்க்க கொள்கைகள், வயது, பயிற்சியின் தன்மை, எவ்வளவு பேரை பணியில் நிரந்தரமாக நியமிப்பது, மருத்துவ ரீதியான தகுதிகள், பயிற்சியின் தரம், பெண்கள் தங்குவதற்கு வீடுகள், தனி கழிப்பறைகள், உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். இவற்றுக்கு நியாயமான போதிய கால அவகாசம் வேண்டும்” என்று கூறியது.
ஆனால், இந்த வாதங்களை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், வரும் நவம்பர் மாதமே என்டிஏ தேர்வில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.