இந்தியா

திருமலையில் அக்.7 முதல் 15-ம் தேதி வரை பக்தர்கள் இன்றி பிரம்மோற்சவம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

57views

ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் நடத்தப்படும். காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் பல்வேறு வாகனங்களில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

பிரம்மோற்சவ விழாவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள்குவிவார்கள். ஆனால், தற்போது கரோனா பரவல் காரணமாக, மத்திய, மாநில அரசுகளின் நிபந்தனைகளின்படி, இந்த ஆண்டும், கடந்த ஆண்டைப்போலவே வாகன சேவைகளை ரத்து செய்து,பிரம்மோற்சவத்தை பக்தர்கள் இன்றி நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து நேற்று காலை திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டியின் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அதிகாரி ஜவஹர் ரெட்டி கூறியதாவது:

கரோனா 3-ம் அலை பரவக்கூடாது என்பதால், இம்முறையும் பிரம்மோற்சவத்தை பக்தர்கள் இன்றி நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆதலால்,வாகன சேவைகள் ரத்து செய்யப்படுகின்றது. கோயிலுக்குள்ளேயே காலையும், மாலையும் அந்தந்த வாகனங்களில் உற்சவ மூர்த்திகள் எழுந்தருள்வர்.

வரும் அக்டோபர் மாதம் 7-ம் தேதி கொடியேற்றமும், அன்றிரவு பெரிய வாகன சேவையும் நடைபெறும். இதில் முக்கிய வாகன சேவைகளான கருட வாகன சேவை அக்டோபர் மாதம் 11-ம் தேதியும், 12-ம் தேதி தங்க தேர்த்திருவிழாவும், 14-ம் தேதி தேர்திருவிழாவும், நிறைவு நாளான 15-ம் தேதி காலை சக்கர ஸ்நானமும், அன்று மாலை கொடியிறக்க நிகழ்ச்சியும் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!