சினிமா

Emmy Awards 2021: விருதுகளை அள்ளிச் சென்ற தி கிரௌன், டெட் லாசோ தொடர்கள்

81views

உலக அளவில் திரைப்படங்களுக்கான உயரிய விருதான ஆஸ்கரைப் போன்று, அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி மற்றும் இணையதள தொடர்களுக்கு எம்மி விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுக்கான விழா, காணொலியில் நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டில் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேரில் நடைபெற்றது.

எம்மி விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலில் ஆப்பிள் டிவி பிளஸ்-ஸில் ஒளிபரப்பான Ted Lasso தொடர் 13 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

ஆனால் சிறந்த தொடர் உள்ளிட்ட 7 விருதுகளை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான தி கிரௌன் தொடர் வென்று அசத்தியது. 11 பிரிவுகளுக்கு இந்த தொடர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், சிறந்த நடிகராக Josh O’Connor மற்றும் சிறந்த நடிகையாக Olivia Colman ஆகியோர் தேர்வு பெற்றனர். சிறந்த துணை நடிகர் மற்றும் நடிகைக்கான விருதுகளையும் தி கிரௌன் தொடர் வென்றது.

சிறந்த கதாசிரியருக்கான விருது Peter Morgan க்கும், சிறந்த இயக்குனருக்கான விருது Jessica Hobbs க்கும் வழங்கப்பட்டது. இதேபோல, சிறந்த நாடகத் தொடர் என்ற விருதையும் கைப்பற்றியது.

சிறந்த நகைச்சுவைத் தொடர் உள்ளிட்ட 4 விருதுகளை ஆப்பிள் டிவியில் வெளியான Ted Lasso தொடர் பெற்றது. குறிப்பிட்ட காலத்துக்கான சிறந்த தொடருக்கான விருதை நெட்ஃபிளிக்ஸில் வெளியான The Queen’s Gambit தொடர் பெற்றது. ஹெச்பிஓவில் ஒளிபரப்பான கிரைம் தொடரான Mare of Easttown ல் நடித்ததற்காக குறிப்பிட்ட காலத்துக்கான தொடரில் சிறந்த நடிகைக்கான விருதை கேட் வின்ஸ்லெட் பெற்றார்.

பிபிசி ஒன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான I May Destroy You என்னும் தொடருக்காக, குறிப்பிட்ட காலத்துக்கான தொடரின் சிறந்த கதாசிரியராகத் தேர்வான மிக்கேலா கோயலின் பேச்சு, அரங்கத்தை நெகிழ வைத்தது. தான் பெற்ற விருதை பாலியல் வன்கொடுமையில் சிக்கிய ஒவ்வொருவருக்கும் சமர்ப்பிப்பதாக மிக்கேலா கோயல் தெரிவித்தார்.

தொலைக்காட்சி மற்றும் இணையதளம் அடிப்படையில், அதிகபட்சமாக நெட்ஃபிளிக்ஸ் 10 விருதுகளை வென்றது. ஹெச்பிஓ-வில் வெளியான தொடர்களுக்கு 6 விருதுகள் கிடைத்தன.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!