போலீஸாரின் மன அழுத்தத்தை குறைக்க சிறப்பு பயிற்சிக்கான டிப்ளமோ: புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் டிஜிபி
போலீஸாரின் மன அழுத்தத்தைக் குறைக்க பயிற்சி கொடுக்கும் நபர்களுக்கான டிப்ளமோ படிப்பு திட்டத்தை டிஜிபி சைலேந்திரபாபு நேற்று தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் போலீஸாருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் ‘நிறைவு வாழ்வு’பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது இந்த பயிற்சிக்கென தனியார் நபர்கள் வரவழைக்கப்பட்டு, அவர்கள் மூலம் போலீஸாருக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
போலீஸாருக்கு போலீஸாரே பயிற்சி அளித்தால், அவர்களின் பிரச்சினைகளை எளிதாக புரிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சி வழங்க முடியும். எனவே,இனிவரும் காலங்களில் காவலர்களுக்கு பயிற்சியளிக்கும் தகுதியை காவல் துறை அதிகாரிகள் பெறும் வகையில், காவல் துறையில் பயிற்சி ஆசிரியர்களை உருவாக்குவது அவசியமாகிறது.
இதன் தொடக்கமாக, 246 மனநல பயிற்சி ஆசிரியர்களுக்கு டிப்ளமோ படிப்பு வழங்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியில் ஈடுபடும் 246 நபர்களில், 112 பேர் காவல் அதிகாரிகள், 134 பேர் மனநல ஆலோசகர்கள் ஆவர். இவர்கள் டிப்ளமோ சான்றுகள் பெற்றபின் தமிழகத்தைச் சார்ந்த 1லட்சத்து 30 ஆயிரம் காவலருக்கும், 3 லட்சம் காவலர் குடும்பத்தினருக்கும், நிறை வாழ்வுப் பயிற்சி வழங்குவார்கள்.
இந்த மனநல பயிற்சி ஆசிரியர்களுக்கான டிப்ளமோ படிப்புபயிற்சியை சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு நேற்று தொடங்கி வைத்தார்.
தேசிய மனநல மற்றும் நரம்பியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் டாக்டர். பிரதிமா மூர்த்தி, கூடுதல் காவல்துறை இயக்குநர் (காவலர் நலன்) சைலேஷ் குமார் யாதவ் மேற்பார்வையில் இந்த பயிற்சி நடைபெறும்.