உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இரண்டு முக்கிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் ஆட்சியை தக்கவைக்க பாரதிய ஜனதாக கட்சி பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அலிகர் நகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அலிகரில் பாதுகாப்பு துறைக்கான கருவிகளை உருவாக்கும் திட்டத்தை அறிவித்தார். இங்கு இஸ்லாமியர்கள் அதிகம் வசிப்பது குறிப்பிடத்தக்கது.
ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடு இந்தியா என்ற அடையாளத்திலிருந்து மாறி, உலகுக்கு ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் நாடு என்ற புதிய அடையாளத்தை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது என பெருமை தெரிவித்த பிரதமர் மோடி, ஜாட் சமுதாயத்தை ஈர்க்கும் வகையில், ஜாட் அரசர் மகேந்திரா பிரதாப் சிங் பெயரில் பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல்லையும் நாட்டினார். உத்தரப் பிரதேச நிர்வாகம் ஒரு காலத்தில் குண்டர்களாலும், மாஃபியாக்களாலும் தன்னிச்சையாக நடத்தப்பட்டது என்ற பிரதமர், அவர்கள் தற்போது சிறையில் உள்ளனர் என்றார்.