இந்தியாவில் மழை, வெள்ளம் தொடர்பான தரவுகளை நடந்துமுடிந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்தது. அதில், கடந்த 2018 ஏப்ரல்முதல் கடந்த மார்ச் 21-ம் தேதி வரையிலான மூன்று ஆண்டுகளில் மழை தொடர்பான பேரிடர்களுக்கு 6,811 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச உயிரிழப்பை சந்தித்த மாநிலங்களில் முதலிடத்தில் மேற்கு வங்கம் உள்ளது. அங்கு 964 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தடுத்த இடங்களில் ம.பி. (917), கேரளா (708) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் கே.ஜே. ரமேஷ் கூறிய தாவது:
மண்ணுக்கும், பூமியில் உள்ள உயிரினங்களுக்கும் மழைப் பொழிவு நல்லது என்றபோதிலும், அது அந்தந்த பருவத்தில் மட்டுமே இருக்க வேண்டும். மாறாக, கோடைக்காலத்தில் அதிக மழைப்பொழிவு இருப்பதும், மழைக்காலத்தில் அதிக வெப்பம் காணப்படுவதையுமே நாம் பருவநிலை மாறுபாடு எனக் கூறுகிறோம்.
புவி வெப்பமயமாதலின் அறிகுறிகள் இவை. உலக வெப்பநிலை 1% அதிகரித்தால், வளிமண்டலத்தின் நீரை தேக்கி வைக்கும்திறன் 7% அதிகரிக்கும். இதுவேபேரிடரை ஏற்படுத்தும் அதிகமழைப்பொழிவுக்கு காரணமாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.