ஹரியானா மாநிலம் கர்னாலில் மாவட்ட தலைமை அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் பேரணியாக சென்றதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஹரியானாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.போராட்டம்மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களுக்கு எதிராக டில்லி எல்லையில் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஒன்பது மாதத்துக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் கர்னாலில் சமீபத்தில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில், பா.ஜ., ஆலோசனை கூட்டம் நடந்தது. முதல்வரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடையை மீறி பேரணியாக வந்த விவசாயிகளை தடியடி நடத்தி போலீசார் விரட்டி அடித்தனர்.
இந்நிலையில் ‘விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து கர்னாலில் மஹா பஞ்சாயத்து கூட்டம் நடத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்’ என, விவசாய அமைப்புகள் அறிவித்திருந்தன.பேச்சு தோல்விஇதையடுத்து கர்னாலில் விவசாயிகள் அதிகளவில் குவிந்தனர். பிரச்னைக்கு தீர்வு காண விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மாவட்ட நிர்வாகம் நடத்திய பேச்சு தோல்வியடைந்தது. இதையடுத்து கலெக்டர் அலுவலகம் நோக்கி விவசாயிகள் பேரணியாக சென்றனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.தலைமை நீதிபதிக்கு கடிதம் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று விவசாய சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மூன்று பேர் அடங்கிய குழுவை உச்ச நீதிமன்றம் ஜனவரியில் நியமித்தது. இந்த குழு விவசாய சட்டங்கள் பற்றி பல்வேறு விவசாய அமைப்புகள், விவசாயிகள், மாநில அரசுகள் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தி, அறிக்கையை மார்ச்சில் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்நிலையில் நிபுணர் குழுவில் இடம் பெற்றிருந்த அனில்கன்வட், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘ நாங்கள் சமர்ப்பித்த அறிக்கைக்கு உச்ச நீதிமன்றம் முக்கியத்துவம் அளிப்பதாக தெரியவில்லை. அறிக்கை விபரங்களை பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்’ என, கூறியுள்ளார்.