அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏஐசிஎப்) சார்பில் ‘ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட்-2021’ இணைய தள சதுரங்கப்போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, உக்ரைன், பிரான்ஸ் என சுமார் 150 நாடுகளை சேர்ந்த 800 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்திய அணி 5 முறை உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தலைமையில் களமிறங்குகிறது. இந்நிகழ்ச்சியில் பேசிய ஆனந்த், ‘ஆன்லைனில் விளையாடினாலும் ஒரே இடத்தில் இருந்து விளையாடுவது வசதியாக இருக்கும். பொதுவாக எனக்கு நேரடியாக விளையாடுவதுதான் பிடிக்கும். 40 ஆண்டுகளாக செஸ் பலகையில்தான் விளையாடி இருக்கிறேன்.
இனி ஆன்லைனில் விளையாடுவது வாடிக்கையாகிவிடும். கொரோனாவால் செஸ் விளையாட்டுக்கு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. வீட்டில் இருப்பதால் நிறைய பேர் செஸ் விளையாட ஆரம்பித்துள்ளனர். இந்த தொடரில் வெற்றி வாய்ப்பு குறித்து முன்பே கணித்து சொல்வது சரியாக இருக்காது. கடந்த முறை சாம்பியன் ஆனது போல இம்முறையும் நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்’ என்றார். நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய அணியின் அதிபன் பாஸ்கரன், ஆர்.பிரக்ஞானந்தா, ஆர்.வைஷாலி, டானியா சச்தேவ், நிஹால் சரீன், டி.ஹரிகா, விதித் குஜராத்தி, சவிதா ஸ்ரீ ஆகியோர் சென்னையில் இருந்து விளையாடுகிறார்கள். கொனேரு ஹம்பி, பி.ஹரிகிருஷ்ணா ஆகியோர் தங்கள் இடங்களில் இருந்து போட்டியில் பங்கேற்பார்கள்.