அடுத்த பாராலிம்பிக் போட்டியில் தங்கம் பதக்கம் வெல்வேன் என்று மாரியப்பன் தங்கவேலு கூறினார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில், உயரம்தாண்டுதலில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார்.
கடந்த பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் இந்தப் போட்டியிலும் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், அவர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன் ஜப்பானில் இருந்து டெல்லி வந்த மாரியப்பனுக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், மாரியப்பன் தங்கவேலு நேற்று சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு பாராலிம்பிக் விளையாட்டு கூட்டமைப்பு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தினர் மற்றும் விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளி வீரர்கள், பொதுமக்கள் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், மாரியப்பன் தங்கவேலு செய்தியாளர்களிடம் கூறும்போது, “தங்கப் பதக்கத்தை இலக்காக வைத்தே சென்றேன். மழை காரணமாக வெள்ளிப் பதக்கமே வெல்ல முடிந்ததது. 2024-ல் நடைபெறும் போட்டியில் நிச்சயம் தங்கம் வென்று, இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்ப்பேன். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.
2016-ல் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் அரசு வேலை வழங்கப்பட்டது. ஆனால் எனக்கு வழங்கவில்லை. இந்த முறை எனக்கு அரசு வேலை கொடுக்குமாறு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளேன். நிச்சயம் தமிழக முதல்வர் வேலைவாய்ப்பு தருவார் என்று நம்பு கிறேன்’ என்றார்.
பின்னர், அண்ணா அறிவாலயத் தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, தனது வெள்ளிப் பதக்கத்தைக் காண்பித்து வாழ்த்து பெற்றார் மாரியப்பன். அவர் கூறும்போது, ‘டோக்கியோ பாராலிம்பிக் தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்ல முடியாமல் வெள்ளிப் பதக்கம் வென்றதில் சிறிது வருத்தம் உள்ளது. எனக்கு அரசுப் பணி வழங்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்’ என்றார்.