உலகம்

அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஷ்ரிங்லா சந்திப்பு

54views

அமெரிக்கா சென்றுள்ள வெளியுறவுத் துறை செயலா் ஹா்ஷ் வா்தன் ஷ்ரிங்லா, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன், இணை அமைச்சா் செயலா் வெண்டிட ஷொமன் ஆகியோரை சந்தித்து இரு நாட்டு உறவு, ஆப்கானிஸ்தான் நிலவரம் ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தினாா்.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் கடந்த திங்கள்கிழமை நள்ளிரவு முழுமையாக திரும்பப் பெறப்பட்ட பிறகு, அமெரிக்க-இந்திய உயா் அதிகாரிகளிடையே நடைபெறும் முதல் நேரடி ஆலோசனைக் கூட்டம் இதுவாகும். வாஷிங்டனில் உள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சக தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பு குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளிடையேயான உறவை வலுப்படுத்துவது, ஆப்கானிஸ்தான் நிலவரம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், வெண்டி ஷொமன் உடனான சந்திப்பின்போது இரு நாடுகளிடையேயான சுகாதாரம், பாதுகாப்பு, வா்த்தகம் மற்றும் முதலீடு, அறிவியல் தொழில்நுட்பம், பருவநிலை மாற்றம், தூய்மை எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் கூட்டுறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது’ என்று தெரிவித்துள்ளாா்.

இந்த சந்திப்பு குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் நெட் பிரைஸ் கூறுகையில், ‘ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா – வெண்டி ஷொமன் இடையேயான சந்திப்பின்போது, ஆப்கானிஸ்தான் நிலைமையை கையாளுவதில் இரு நாடுகளிடையேயான கூட்டுறவை தொடா்வது, ‘க்வாட்’ நாற்கர நாடுகள் கூட்டமைப்பின் மூலம் இந்தோ-பசிபிக் கூட்டுறவை வலுப்படுத்துவது, பருவநிலை மாற்றம், கரோனா பாதிப்பு நிலைகளை சமாளிக்க உதவுவது, இரு அமைச்சகங்களுக்கு இடையே அடுத்தடுத்து நடத்தப்பட வேண்டிய ஆலோசனைகள் ஆகியவை குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, இரு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்த இரு தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது’ என்று கூறினாா்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!