உலகம்

ஈரானைப் போன்று ஆப்கானிஸ்தானில் ஆட்சி : தாலிபான்கள் நடவடிக்கை

46views

ஈரானைப் போன்று ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்க தாலிபான்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆப்கனின் உச்சபட்ச தலைவராக ஹெய்பத்துல்லாஹ் அகுன்ஜதா நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆப்கானிஸ்தானை விட்டு நேட்டோ படைகள் வெளியேறிய பின்னர், ஆட்சி அமைக்க தாலிபான்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, ஈரான் நாட்டில் இருப்பதுபோன்று ஆப்கானிஸ்தானிலும் அரசு அமைக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, நாட்டின் உச்சபட்ச தலைவர் நியமிக்கப்பட்டு, அவர் அரசியல் மற்றும் மதரீதியான விவகாரங்களுக்கு தலைவராக செயல்படுவார்.

அவருக்கு கீழ், அதிபர் அல்லது பிரதமர் நியமிக்கப்படுவார். இந்நிலையில், உச்சபட்ச தலைவர் பதவி, தாலிபான் அமைப்பின் மூத்த தலைவர் ஹெய்பத்துல்லாஹ் அகுன்ஜதாவுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியத்தை மையமாக கொண்டு புதிய அரசு இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலிபான்களின் அரசியல் பிரிவு தலைவர் முல்லா பராதர் வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்கலாம் என்றும் கூறப்படுகின்றது.

தாலிபான் அமைப்பின் நிறுவனர் முல்லா ஓமர் போன்றே, அகுன்ஜதாவும் யாரும் அறியப்படாதவர். இதுவரை அகுன்ஜதாவின் ஒரே ஒரு புகைப்படத்தை மட்டுமே தாலிபான்கள் வெளியிட்டுள்ளனர். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்னர், அரசு அமைப்பது தொடர்பான ஆலோசனைகளில் அகுன்ஜதா பங்கேற்றாலும் அவர் தொடர்பான காட்சிகளே, புகைப்படங்களே வெளியிடப்படவில்லை.

அகுன்ஜதா 1990ஆம் ஆண்டு தாலிபான் இயக்கத்தில் இணைந்தார். அப்போது முதல் மதம் தொடர்பான விவகாரங்களை அவர் கவனித்து வந்தார். 1995ல் தாலிபான்கள் ஃபரா மாகாணத்தை கைப்பற்றிய பின்னர், அங்கு ஷர்யா சட்டத்தை கடுமையாக அமல்படுத்தும் பொறுப்பு அகுன்ஜதாவுக்கு வழங்கப்பட்டது. 1996ஆம் ஆண்டில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பின்னர், ராணுவ நீதிமன்றத்தில் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.

தாலிபான்கள் ஆட்சியை இழந்த பின்னரும் அகுன்ஜதாவின் செல்வாக்கு உயர்ந்து முக்கிய தளபதிகளில் ஒருவர் ஆனார். 2015ல் முல்லா மன்சூரின் மூன்று தளபதிகளில் ஒருவராக அகுன்ஜதா நியமிக்கப்பட்டார். எனினும், அகுன்ஜதாவே தனது வாரிசு என முல்லா மன்சூர் உயில் எழுதி வைத்தார். 2016ஆம் ஆண்டு முல்லா மன்சூரின் மறைவுக்கு பின்னர், தாலிபான் இயக்கத்தின் தலைமை தளபதியானார்.

2017ல் ஹெல்மாண்ட் மாகாணத்தில் ராணுவ தளத்தின் மீது தாலிபான்கள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். தற்கொலை படை தாக்குதலை முன்னின்று நடத்தியது அகுன்ஜதாவின் மகனான 23 வயது அப்துர் ரஹ்மான். இந்த தாக்குதலில் அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவமே தாலிபான்கள் மத்தியில் அகுன்ஜதாவின் செல்வாக்கை பல மடங்கு உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!