இந்தியா

ஜஸ்ட் டயல் நிறுவனத்தை மேலாண்மை செய்யும் முழு பொறுப்பையும் ஏற்றது ரிலையன்ஸ்

50views

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் உள்ளூர் தகவல் தேடல் சேவையில் முன்னணியில் இருக்கும் ஜஸ்ட் டயல் நிறுவனங்களுக்கு இடையே கடந்த மாதத்தில் ஒப்பந்தம் உறுதியானது. அதன்படி, ரிலையன்ஸின் ரீடைல் வென்சர்ஸ் லிமிடெட் நிறுவனம் ஜஸ்ட் டயல் நிறுவனத்திடம் இருந்து 3,497 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை கையகப்படுத்தியுள்ளது.

ஜஸ்ட் டயல் நிறுவனத்திடம் இருந்து முதல் கட்டமாக 40.95 விழுக்காடு பங்குகளை கையகப்படுத்துவதாகவும், அதன்பிறகு ஓஃபன் ஆபர் மூலம் 26 விழுக்காடு பங்குகளை கையகப்படுத்த உள்ளதாகவும் ரிலையன்ஸின் ரீடைல் வென்சர்ஸ் லிமிடெட் நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்தநிலையில், ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘செபியின் கையகப்படுத்துதல் ஒழுங்குமுறைகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் முழு மேலாண்மையையும் ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனம் கட்டுப்பாட்டுக்குள் எடுக்கிறது.

ஜூலை 20-ம் தேதி ரிலையன்ஸ் சில்லறை வர்த்தகம் ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் 1.31 கோடி பங்குகளை ஒரு பங்கின் விலை ரூ. 1,020 மதிப்பில் வி.எஸ்.எஸ் மணி என்பவரிடமிருந்து ப்ளாக் வின்டோ முறையில் வாங்கியது. இந்த கையகப்படுத்துதல் ஜஸ்ட் டயலின் 15.63 சதவீதத்தைக் குறிக்கிறது.

செப்டம்பர் 1-ம் தேதி 2.12 கோடி பங்குகளை ஒரு பங்கு 1,022 ரூபாய் வீதம் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒதுக்குவதற்கு ஜஸ்ட் டயல் நிறுவனம் இணங்கியது. அதன்மூலம், ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் 25.35 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனம் வாங்கியது.

ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனம் ரிலையன்ஸ் குழுமத்தின் கீழ் செயல்படும் துணை நிறுவனமாகும். ரிலையன்ஸ் குழுமத்தின் கீழ் உள்ள சில்லறை வர்த்தக நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் கீழ் வரும். 2021-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி கணக்கின்படி ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக நிறுவனம் 1,57,629 கோடி ரூபாய் வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளது. அதன்மூலம் 5,481 கோடி ரூபாய் நிகர லாபம் அடைந்துள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் லாபகரமாக இயங்கும் சில்லறை வர்த்தக நிறுவனம் ரிலையன்ஸ் ஆகும். உலக அளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் சில்லறை வர்த்தக நிறுவனம் ரிலையன்ஸ் ஆகும். சர்வதேச சில்லறை வர்த்தக நிறுவனப் பட்டியலில் 53-வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் முதல் 100 இடத்தில் இடம்பிடித்த ஒரே இந்திய நிறுவனம் ரிலையன்ஸ் மட்டுமே.

இந்திய அளவில் உள்ளூர் விவகாரங்கள் குறித்து தேடுவதற்குரிய மிக முக்கியமான தளமாக ஜஸ்ட் டயல் நிறுவனம் உள்ளது. பயனர்கள் தங்களுக்கு தேவையானவற்றை தேடுவதற்கு இணையதளம், ஆப், தொலைபேசி, குறுஞ்செய்திகள் ஆகிய வழிகளில் தேடுவதற்கான சேவையை வழங்குகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!