துபாயில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய மற்றும் மிக உயரமான ராட்டின சக்கரம் வரும் அக்டோபர் 21ம் தேதி திறக்கப்பட உள்ளது.மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் சுற்றுலா பயணியரை கவரும் விதமாக பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் அதன் ஒரு முயற்சியாக துபாயின் புளூவாட்டர்ஸ் தீவில் ஒரு பிரமாண்ட ராட்டின சக்கரம் கட்டமைக்கப்பட்டுள்ளது.
‘ஐன் துபாய்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ராட்டினம் உலகின் மிகப்பெரிய மற்றும் மிக உயரமான ராட்டின சக்கரம் என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு முன் உலகின் உயரமான ராட்டின சக்கரமாக அமெரிக்காவின் லாஸ் வேகாசில் உள்ள ‘ஹை ரோலர்’ ராட்டினம் இருந்தது. அந்த ராட்டினம் 167 மீட்டர் உயரமானது. தற்போது கட்டப்பட்டுள்ள இந்த ஐன் துபாய் ராட்டினம் 250 மீட்டர் உயரமாகும். இது பிரிட்டனின் லண்டனில் உள்ள ‘லண்டன் ஐ’ ராட்டின சக்கரத்தை விட இரண்டு மடங்கு அதிக உயரமாகும்.ஐக்கிய அரபு எமிரேட்சில் இந்த ஆண்டு 50வது தேசிய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இந்த ராட்டினம் வரும் அக்டோபர் 21ம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த ராட்டினத்தில் ஒரு முழு சுற்று வர 38 நிமிடங்கள் ஆகும்.