161
இனி சந்திப்பிற்கு சாத்தியமற்ற நிரந்தரப் பிரிவாக கிடத்தி வைக்கப்பட்டிருப்பவரின் முன் அணத்திக் கொண்டிருக்கும் மன உளைச்சல்கள் அலைபாயும் கொடுமை, எத்தனை வலியானது.
பின்னோக்கி நகரும் காலம் கடிவாளமற்ற குதிரையைப் போன்றும் ,கரை காணாத காட்டாறு போன்றும் தறிகெட்டோடத் தடுத்து நிறுத்ததிலில்லா தவித்தலை,எந்தச் சொற்கள் கொண்டும் வரையறைப் படுத்தமுடியாததுதான்.
அன்றொரு நாள் கண்ணீர்மல்க நின்றிருந்தபொழுது தோளணைத்து தலைகோதியதில் தவிடுபொடியாகி உதிர்ந்து காணாமல் போன கவலைகள் விட்டுச் சென்ற வடுக்களில் அடிக்கடி உதிர்த்துக் கொண்டேயிருக்கும் நன்றிக்கடன் வார்த்தைகள்
உள்ளங்கை கோர்த்து அன்புப் பரிமாற்றங்களை நிகழ்த்திய போது கிடைக்கப்பெற்ற அத்தனை ரசவாதங்களும் நினைவுகளாக்கிக் கொள்ளுதல் கட்டாயம் இனி.
புழக்கடையில் நீருற்றி வளர்த்த ரோஜாச் செடியிலிருக்கும் பூக்களின் முகத்தில் எதிர்பார்த்தலின் ஏமாற்ற ரேகை வளரக் கூடும்.
எப்படியாவது சமாதானம் சொல்லி கடக்கத் தயாராகும் நாட்களின் பின்னே நடைபோடுகிறது மிச்ச வாழ்வு.
வரவும் செலவும் பணம் சார்ந்தது மட்டுமல்ல ,மனித உறவுகளுக்கும் மாறாத ஒன்றென்று உறுதியாக நிகழ்த்திக் காட்டுகிறது கால அனுபவங்கள்.
-
கனகா பாலன்
add a comment